டெல் அவில்: இஸ்ரேலிய ராணுவம் அனைத்து பாலஸ்தீன குடிமக்களையும் காசா நகரத்தை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டிருந்த நிலையில், 300,000 பாலஸ்தீனர்கள் காசா நகரத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.
ஒன்பது மாத காலப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகள் தீவிரமடைந்து வரும் நிலையில், இஸ்ரேல் கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே, கத்தாரில் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன. அக்டோபர் 7 முதல் காசா மீதான இஸ்ரேலின் போரில் 38,345 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 88,295 பேர் காயமடைந்துள்ளனர். ஹமாஸ் தலைமையிலான தாக்குதல்களில் இஸ்ரேலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,139 என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் காசாவில் இன்னும் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் ராணுவம் காசா நகரை விட்டு பாலஸ்தீனர்களை வெளியேற்ற கட்டாயப்படுத்திய நிலையில், மக்கள் வெளியேறும்போது அவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதாக காசா நகரத்திலிருந்து வெளியேறும் பொதுமக்கள் கூறுகின்றனர். அந்த அறிவிப்புக்குப் பிறகு 300,000 பாலஸ்தீனர்கள் காசா நகரத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.
பாலஸ்தீன பிரதமர் முகமது முஸ்தபா இது குறித்து ஒரு கூட்டத்தில் கூறும்போது, “எங்கள் அகதிகள் முகாம்கள் பெரும் அழிவுக்கு உள்ளாகியுள்ளன. மக்கள் எவ்வாறு வாழ்கிறார்கள், அவர்களின் வாழ்க்கை எவ்வாறு செல்கிறது என்பது யாருக்கும் தெரிவதில்லை. இந்தப் பிரச்சினையை தீவிரமாக விசாரிக்க வேண்டும். இஸ்ரேலிய குடியேற்றங்களை விரிவுபடுத்துவது சட்டவிரோதமானது; ஏற்றுக்கொள்ள முடியாதது. காசாவின் நிலைமை மிகவும் சோகமாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.