ஸ்டார்லைனர் விண்கலம் எங்களை பத்திரமாக பூமிக்கு கொண்டு வரும்.. விண்வெளி வீரர்கள் நம்பிக்கை

இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் என்ற விண்வெளி வீரருடன் கடந்த மாதம் 5-ம் தேதி விண்வெளிக்கு புறப்பட்டுச் சென்றார். அமெரிக்காவின் கேப் கனவெரல் ஏவுதளத்தில் இருந்து புறப்பட்ட அவர்கள் 7-ந்தேதி சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தனர். இருவரும் விண்வெளி பயணத்தை முடித்துக்கொண்டு 13-ந்தேதி பூமிக்கு திரும்பும் வகையில் பயண திட்டம் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்களின் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக அவர்கள் திரும்பி வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. திட்டமிட்ட காலத்தை விட கூடுதல் நாட்கள் விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கிறார்கள்.

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் பயணம் செய்யும் விண்கலமான ஸ்டார்லைனரை போயிங் நிறுவனம் வடிவமைத்திருந்தது. இந்த விண்கலத்தில் ஹீலியம் வாயு கசிவு ஏற்பட்டிருக்கிறது. 5 முறை கசிவு ஏற்பட்டதன் காரணமாக விண்கலத்தை இயக்க முடியாமல், பூமி திரும்பும் பயணம் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகியும் விண்கலத்தில் உள்ள பிரச்சினை முழுமையாக சரிசெய்யப்படவில்லை. இதனால் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் பூமிக்கு புறப்படுவதற்கான தேதி உறுதி செய்யப்படவில்லை.

ஹீலியம் வாயு கசிவுகள் மற்றும் த்ரஸ்டர்களில் உள்ள சிக்கல்களை சரிசெய்ய நாசா மற்றும் போயிங் விஞ்ஞானிகள் கடுமையாக முயற்சி செய்து வருகின்றனர். எங்கு, என்ன தவறு நடந்துள்ளது? என்பதை கண்டறிந்து சரி செய்வதற்கான சோதனைகளை நடத்தி வருகின்றனர். குறிப்பாக த்ரஸ்டர்களை சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்ததும், விண்வெளி நிலையத்தில் இருந்து விண்கலம் புறப்படுவதற்கான ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்படும். அநேகமாக இந்த மாத இறுதியில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமி திரும்பலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் இருவரும் அங்கிருந்தபடி முதல் முறையாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது, ஸ்டார்லைனர் விண்கலத்தில் பிரச்சினை இருந்தபோதிலும், தங்களை பாதுகாப்பாக திருப்பி அழைத்து வரும் என நம்பிக்கை தெரிவித்தனர்.

பூமியில் த்ரஸ்டர் சோதனை முடிந்ததும் திரும்பி வருவோம் என எதிர்பார்க்கிறோம். சுற்றுப்பாதையில் கூடுதல் நேரம் இருப்பது குறித்து அதிருப்தி தெரிவிக்கவில்லை. விண்வெளி நிலையக் குழுவினருக்கு உதவுவதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்றும் அவர்கள் கூறினர்.

விண்கலம் நிச்சயம் எங்களை பூமிக்கு கொண்டு வரும், எந்த பிரச்சினையும் இல்லை என தனது உள்ளுணர்வு சொல்வதாக சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்தார்.

“விண்வெளி நிலையத்தை ஜூன் 6-ம் தேதி நெருங்கியபோது 5 த்ரஸ்டர்கள் தோல்வியடைந்தன. அதில் நான்கு த்ரஸ்டர்கள் மீண்டும் செயல்படுத்தப்பட்டன. என்னையும் வில்லியம்ஸையும் சுற்றுப்பாதையில் இருந்து வெளியேற்ற போதுமான உந்து சக்திகள் இருக்க வேண்டும். தேவைப்பட்டால் அந்த சக்தியை வழங்கக்கூடிய பெரிய இயந்திரங்களும் உள்ளன” என்றார் வில்மோர்.

பூமியில் இருந்து இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் எந்த சிக்கலும் கண்டறியப்படவில்லை. த்ரஸ்டர் சோதனையின்போது அதிக வெப்பம் ஏற்படவில்லை என நாசா அதிகாரி ஸ்டிச் கூறியிருக்கிறார். எனினும் விண்கலத்தை பூமிக்கு கொண்டு வருவதற்கு முன், சந்தேகத்திற்கிடமான த்ரஸ்டர்கள் சேதமடையவில்லை என்பதை நிர்வாகிகள் உறுதிசெய்ய விரும்புகிறார்கள்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.