குறுகிய காலத்தில் மிகப் பெரிய அளவில் லாபம் பார்க்கலாம் என்கிற ஆசையில் ஃப்யூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ் (சுருக்கமாக, எஃப்&ஓ) வர்த்தகத்தில் பல லட்சம் பேர் ஈடுபட்டு, மிகப் பெரும் நஷ்டத்தை அடைந்து வருகின்றனர். இதைத் தடுப்பதற்காக, பங்குச் சந்தைக் கட்டுப்பாட்டு வாரியமான செபி அமைப்பு, சில நடவடிக்கைகளை எடுக்க முனைந்துள்ளது. அதை நாம் நிச்சயம் வரவேற்கலாம்.
பங்குச் சந்தையை முதலீட்டு நோக்கில் கருதாமல், வர்த்தக (Trading) நோக்கில் அணுகுகிறவர்களுக்கு எஃப்&ஓ என்பது நிச்சயம் தெரிந்திருக்கும். இது மிகவும் ரிஸ்க்கானது. முழுக்க முழுக்க யூகத்தின் அடிப்படையில் நடக்கக்கூடியது. இதில் ஃப்யூச்சர்ஸ் என்பது மிகப் பெரிய அளவில் பணம் வைத்திருப்பவர்கள் மட்டுமே விளையாடக்கூடியது. ஆனால், ஓரளவு பணம் வைத்திருப்பவர்கள்கூட ஆப்ஷனில் ஈடுபடலாம் என்பதால், சிறு முதலீட்டாளர்கள் இதில் அதிகம் ஈடுபடுகின்றனர். விளைவு, 90% பேர் நஷ்டத்தை மட்டுமே அடைகிறார்கள்.
இதைத் தடுக்கத்தான், இப்போது செபி அமைப்பு இரு முக்கியமான கட்டுப்பாடு களைக் கொண்டுவருவதற்குப் பரிசீலித்து வருகிறது. ஒன்று, தற்போது குறைந்த பட்சமாக இருக்கும் ஆப்ஷன் கான்ட்ராக்ட் மதிப்பை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சம் முதல் ரூ.30 லட்சமாக உயர்த்துவது. இரண்டாவது, வாராந்தர ஆப்ஷன்களில் ஒரு எக்ஸ்சேஞ்சில் ஒரே ஒரு வாராந்தர எக்ஸ்பைரி கான்ட்ராக்ட்டை மட்டுமே வாங்க அனுமதிப்பது. இந்த இரு நடவடிக்கைகளையும் உடனடியாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் சிறு முதலீட்டாளர்கள் இந்தப் ‘பகடை’ விளையாட்டில் ஈடுபடாமல் தடுக்கலாம்.
இதற்குமுன், கொரியாவிலும் சீனாவிலும் சிறு முதலீட்டாளர்களைக் காக்க சில கறார் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 2010-11-ம் ஆண்டில் கொரியாவில் ஆப்ஷன் வர்த்தகம் கட்டுக்கு மீறிச் சென்றபோது, ஆப்ஷன் கான்ட்ராக்ட்டின் மதிப்பை ஐந்து மடங்கு அதிகமாக்கி, சிறு முதலீட்டாளர்களை அண்டவிடாமல் செய்தது அந்த நாட்டு பங்குச் சந்தைக் கட்டுப்பாட்டு அமைப்பு. அதே போல, 2015-ல் சீனாவில் ஆப்ஷன் வர்த்தகத்துக்கு முன்கூட்டியே கட்டியாக வேண்டிய மார்ஜின் தொகையை 10% முதல் 40% வரை உயர்த்தியது. இதனால், இந்த நாடுகளில் சிறு முதலீட்டாளர்கள் ஆப்ஷன் வர்த்தகத்தில் ஈடுபடுவது மிகவும் குறைந்தது.
இன்றைக்கு நம் இந்திய நாட்டுக்கும் தேவைப்படுவது இவை போன்ற நடவடிக்கைகள்தான். இன்றைக்குக் குறுகிய காலத்தில் பெரும் லாபம் சம்பாதிக்க நினைப்பவர்களின் கூடாரமாக ஆப்ஷன் சந்தை மாறிவிட்டது. அதிகம் பணம் வைத்திருப்பவர்கள் பணம் போனாலும் பரவாயில்லை என்று நினைத்து, இதில் ஈடுபடுவது வேறு. நிறைய லாபம் பார்த்துவிடலாம் என்கிற பேராசையில் அப்பாவி மக்கள் கடன் வாங்கி, இதில் பணம் கட்டி, நஷ்டம் அடைவது என்பது வேறு.ஒன்றும் அறியாதவர்கள் தங்கள் பணத்தை அநியாயமாக இழப்பதற்கு அரசாங்கமும் செபி அமைப்பும் எந்த வகையிலும் அனுமதிக்கக் கூடாது! அதற்கு இந்த இரு நடவடிக்கைகளும் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே பங்குச் சந்தை ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு!
– ஆசிரியர்