ஆகஸ்ட் மாத கலையுலக கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கையில், தமிழ்ப் படங்களின் ரிலீஸ் எண்ணிக்கை அதிகமாகும் எனத் தெரிகிறது. நீண்ட மாதங்களாக எதிர்பார்க்கப்பட்ட பா.இரஞ்சித்தின் `தங்கலான்’ படத்துடன் கீர்த்தி சுரேஷின் `ரகு தாத்தா’, நானியின் `சூர்யாவின் சனிக்கிழமை’, பாலாவின் `வணங்கான்’ எனப் பல படங்கள் வெளியாகும் சூழல்கள் இருக்கின்றன.
ஆகஸ்ட் முதல் வாரத்திலேயே, அதாவது ஆகஸ்ட் 2ம் தேதியில் ‘மழை பிடிக்காத மனிதன்’, ‘போட்’, ‘ஜமா’, ‘வாஸ்கோடகாமா’, ‘கொட்டேஷன் கேங்’ ஆகிய படங்கள் வெளியாகின்றன. இவை தவிர தேதி குறிப்பிடப்படாமல் சில சின்ன பட்ஜெட் படங்களும் ரிலீஸுக்கு வரிசைக்கட்டி நிற்கின்றன.
இங்கே சில படங்களைப் பார்ப்போம்…
போட்
சிம்புதேவன் இயக்கத்தில் யோகிபாபு கதை நாயகனாக நடித்திருக்கும் படம் ‘போட்’. முழுக்க முழுக்கக் கடலிலே எடுக்கப்பட்ட படமிது என்கிறார்கள். இந்தப் படத்தில் யோகி பாபுவுடன், எம்.எஸ்.பாஸ்கர், கௌரி கிஷன், சாம் எனப் பலரும் நடித்துள்ளனர். இது ஆகஸ்ட் 2ம் தேதி வெளியாகிறது.
ஜமா
பல விருதுகளை அள்ளிய ‘கூழாங்கல்’ படத்தை தயாரித்தவர்களின் அடுத்த படைப்பு ‘ஜமா’. இளையராஜா இசையமைக்கும் இப்படம் தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வைப் பிரதிபலிக்கிறது. சேத்தன், அம்மு அபிராமி, ஸ்ரீ கிருஷ்ண தயாள், கே.வி.என்.மணிமேகலை, காலா குமார், வசந்த் மாரிமுத்து எனப் பலரும் நடித்துள்ளனர்.
வாஸ்கோடகாமா
‘காதலில் விழுந்தேன்’, ‘மாசிலாமணி’ என ஒரு சமயத்தில் ஹீரோவாகத் தொடர்ந்து ஸ்கோர் செய்தவர் நகுல். ஒரு சின்ன இடைவெளிக்குப் பின் தன் இரண்டாவது இன்னிங்ஸை ‘வாஸ்கோடகாமா’விலிருந்து ஆரம்பித்திருக்கிறார். அர்த்தனா பினு ஹீரோயின். வம்சி கிருஷ்ணன், முனீஸ்காந்த், ஆனந்த்ராஜ் எனப் பலரும் நடித்துள்ளனர்.
கொட்டேஷன் கேங்
சன்னி லியோன், பிரியாமணி என நமக்கு தெரிந்த முகங்கள் நடித்திருப்பதால் இந்த இந்திப் படம் தமிழிலும் வெளியாகிறது. விவேக் கே.கண்ணன் இயக்கியுள்ளார். டிரம்ஸ் சிவமணி இசையமைத்துள்ளார்.
சூர்யாவின் சனிக்கிழமை
நானியின் 31வது படமிது. தெலுங்கில் ‘Saripodhaa Sanivaaram’ என்ற பெயரில் வெளியாகும் இந்தப் படம் தமிழிலும் வெளியாகிறது. ‘அந்தே சுந்தரானிகி’யை இயக்கிய விவேக் ஆத்யா இதை இயக்கியுள்ளார். நானி, பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா எனப் பலரும் நடித்துள்ளனர். இந்தப் படம் ஆகஸ்ட் 26ம் தேதி வெளியாகிறது.
ரகு தாத்தா
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகும் ஹீரோயின் சென்ட்ரிக் படமிது. ‘கே.ஜி.எஃப்’ மற்றும் ‘காந்தாரா’ திரைப்படங்களைத் தயாரித்த ஹோம்பாலே ஃபிலிம்ஸ், நேரடியாகத் தமிழில் தயாரிக்கும் முதல் படமிது. ஓ.டி.டி-யில் வெளியாகிப் பேசப்பட்ட ‘தி ஃபேமிலி மேன்’ வெப்சீரீஸின் ரைட்டர் சுமன் குமார், இப்படத்தை இயக்கியிருக்கிறார். கீர்த்தி தவிர, எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்தர விஜய், ஆனந்த் சாமி, இஸ்மத் பானு எனப் பலரும் நடித்துள்ளனர்.
மழை பிடிக்காத மனிதன்
விஜய் ஆண்டனியின் நடிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவான படம் ‘மழை பிடிக்காத மனிதன்’. ஜி.தனஞ்செயன், கமல் போத்ரா தயாரித்திருக்கும் இப்படத்தில் எளிய மனிதர்களின் கதையை ஆக்ஷனும் எமோஷனுமாகச் சொல்லியிருக்கிறார்கள். விஜய் ஆண்டனியின் ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்திருக்கிறார். சரண்யா, சத்யராஜ், சரத்குமார் என கதைக்கான ஆட்கள் வலுவாக உள்ளனர்.
தங்கலான்
பா.இரஞ்சித்தின் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படமிது. சமீபத்தில் இதன் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை அள்ளி வருகிறது. விக்ரம், மாளவிகா மோகன், பார்வதி திருவோத்து எனப் பலரும் நடித்துள்ள இப்படம் கோலார் தங்க வயலின் பின்னணியில் 17ம் நூற்றாண்டில் நடக்கும் கதையாக உருவாகியிருக்கிறது. இந்தப் படம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் என எதிர்பார்ப்பு உள்ளது.
அதேபோல பாலாவின் இயக்கத்தில் அருண் விஜய் நடித்திருக்கும் ‘வணங்கான்’ படமும் ஆகஸ்ட்டில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இது தவிர விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’, சிவகார்த்திகேயனின் ‘அமரன்’, ஜெயம் ரவியின் ‘ஜீனி’, அருள்நிதியின் ‘டிமான்டி காலனி 2’ ஆகிய படங்களும் ரிலீஸுக்கு ரெடியாகி வருகின்றன.