நேபாளத்தில் நிலச்சரிவு | 60+ நபர்களுடன் திரிசூலி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பேருந்துகள்

காத்மண்டு: மத்திய நேபாளத்தில் மதன்-ஆஷ்ரித் நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் இரண்டு பயணிகள் பேருந்துகள் அடித்துச் செல்லப்பட்டன. இந்த பேருந்துகளில் 63 பயணிகள் இருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நேபாளத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, திரிசூலி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக, மதன் – ஆஷ்ரித் நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டு, வெள்ளிக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில், சாலையில் சென்றுகொண்டிருந்த இரண்டுப் பேருந்துகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன. இரண்டு பேருந்துகளிலும் 63 பயணிகள் இருந்துள்ளனர். பேருந்தில் இருந்த பயணிகளை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பேருந்து திரிசூலி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதால், தேடுதல் மற்றும் மீட்புப் பணிக்கு இடையூறாக உள்ளது எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேபாள பிரதமர் புஷ்பா கமல் தஹல் கூறுகையில், “நாராயண்காத் – முகிலின் சாலைப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் பேருந்து அடித்துச் செல்லப்பட்டதில் பல பயணிகளைக் காணவில்லை என்ற செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமடைகிறேன். நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதால், பயணிகளைத் தேடித் திறம்பட மீட்கும்படி, உள்துறை நிர்வாகம் உட்பட அரசாங்கத்தின் அனைத்து துறைகளுக்கும் அறிவுறுத்தியுள்ளேன்.



வானிலை மோசமாக இருப்பதால் காத்மாண்டுவில் இருந்து சித்வானின் பரத்பூருக்குச் செல்லும் அனைத்து விமானங்களும் இன்றைய தினம் ரத்து செய்யப்பட்டுள்ளன. நேபாள காவல்துறை மற்றும் ஆயுதப்படை காவலர்கள் மீட்பு பணிகளுக்காக சம்பவ இடங்களை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக காவல்துறை கண்காணிப்பாளர் பவேஷ் ரிமல் தெரிவித்தார். பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதால், நாராயண்காட்-முகிலிங் சாலைப் பகுதியில் போக்குவரத்து தடைபட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.