தலைமை ஆசிரியர் இன்றி 4,500 பள்ளிகள்; முதல்வர் இன்றி 60 கல்லூரிகள்? – தமிழக மாணவர்களின் எதிர்காலம்?

`தமிழ்நாட்டில் சுமார் 4,500 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை; இது தான் திமுக அரசின் சாதனையா?’ எனக் கேள்வி எழுப்பி பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கண்டன அறிக்கை வெளியிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தலைமை ஆசிரியர் இல்லாமல் 4,500 அரசு பள்ளிகள்:

இதுகுறித்து பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் 2,994 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளிட்ட 4,500 பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை என்று ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. அரசுப் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும் அரசுப் பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்படாதது கண்டிக்கத்தக்கது. தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால், பொறுப்பு தலைமை ஆசிரியர்களாக பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பள்ளி மணி நேரத்தின் பெரும் பகுதியை தலைமை ஆசிரியர் பணிக்கான கடமைகளை நிறைவேற்றுவதிலேயே கழிப்பதால் அவர்களால் பாடங்களை நடத்த முடியவில்லை. அதனால் மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

ஸ்டாலின் – ராமதாஸ்

தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாததற்கு தமிழக அரசின் அலட்சியம் தான் காரணம் ஆகும். கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பாகவே பதவி உயர்வு கலந்தாய்வு மூலம் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். அப்போதுதான் காலியாக உள்ள பிற ஆசிரியர் பணியிடங்கள் கணக்கிடப்பட்டு அவற்றை நிரப்ப முடியும். ஆனால், தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை நடத்துவதில் அரசு ஆர்வம் காட்டவில்லை. அதனால் தலைமை ஆசிரியர் பணியிடங்களையும், பிற ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

அரசுப் பள்ளிகளில் ஏற்கனவே கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. இந்த நிலையில், தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாததால், இருக்கும் குறைந்த எண்ணிக்கையிலான ஆசிரியர்களையும் நிர்வாகப் பணிக்கு அனுப்ப வேண்டியிருப்பதால் அரசு பள்ளிகளில் கற்பித்தல் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை உயர்த்தப்போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த திமுக, ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் கல்வித்தரத்தை மேலும் சீரழித்து வருகிறது. இந்த நிலையை மாற்றி, காலியாக உள்ள அனைத்துத் தலைமை ஆசிரியர் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!” எனத் தெரிவித்திருக்கிறார்.

அரசுப் பள்ளி

முதல்வர் இல்லாமல் 60 அரசு கலைக் கல்லூரிகள்:

இதேபோல, ஏற்கெனவே கடந்த மாதம் `முதல்வர் இல்லாமல் இயங்கும் 60-க்கும் மேற்பட்ட அரசு கலைக் கல்லூரிகள் இயங்கிவருவதாக குற்றம்சாட்டி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், “தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 60-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் கடந்த பல மாதங்களாக காலியாக உள்ளன. அதனால், கல்லூரியின் அன்றாட நிர்வாகம் பாதிக்கப்படுவதுடன், கல்வித்தரமும் குறைகிறது. அரசு கல்லூரிகளின் முதல்வர் பணியிடங்களை நிரப்புவதில் தமிழக அரசு காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது. முதல்வர்கள் இல்லாமல் அரசு கல்லூரிகளின் செயல்பாடுகள் பாதிக்கப்படுவதற்கு முழுக்க முழுக்க தமிழக அரசின் அலட்சியம் தான் காரணம்.

பள்ளிக்கல்வித் துறை

கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்களை நிரப்புவது என்பது கடினமான பணி அல்ல. கல்லூரி முதல்வர்கள் பணி மூப்பு அடிப்படையில் தான் நியமிக்கப்படுகிறார்கள். கல்லூரி ஆசிரியர்களின் பணி மூப்புப் பட்டியல் தயார் நிலையில் உள்ளது. அதன் அடிப்படையில் ஒரே நாளில் அனைத்துக் கல்லூரிகளுக்கும் முதல்வர்களை நியமிக்க முடியும். ஒவ்வொரு ஆண்டும் ஓய்வு பெறும் முதல்வர்கள் யார், யார்? என்பது அரசுக்கு முன்கூட்டியே தெரியும். அதனால், முதல்வர்கள் ஓய்வு பெறுவதற்கு முன்பே புதிய முதல்வர்களை தேர்வு செய்து நியமிக்க முடியும். அதை செய்ய அரசு தயங்குவது ஏன்? என்பது தான் தெரியவில்லை. அரசு கல்லூரி முதல்வர் பணியிடங்கள் தவிர்க்க முடியாத காரணங்களால் ஒரு மாதமோ, இரு மாதங்களோ காலியாக கிடந்தால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. ஆனால், தமிழ்நாட்டில் பல கல்லூரிகளின் முதல்வர் பணியிடங்கள் 8 மாதங்களுக்கும் மேலாக காலியாகக் கிடக்கின்றன என்பது தான் கவலையளிக்கும் உண்மையாகும்.

2024-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தமிழ்நாடு முழுவதும் 13 கல்லூரிகளின் முதல்வர் பணியிடங்கள் மட்டுமே காலியாக இருந்தன. பிப்ரவரி மாதத்தில் இந்த எண்ணிக்கை 30 ஆக உயர்ந்தது. இப்போது காலியிடங்களின் எண்ணிக்கை 60-க்கும் அதிகமாகி விட்டது. மே மாதத்தில் மாணவர் சேர்க்கை நடவடிக்கைகள் தொடங்கும், ஜூன் மாதத்தில் வகுப்புகள் தொடங்கும் என்பது அரசுக்கு நன்றாகத் தெரியும். அதனால், மே மாதத்திற்கு முன்பாகவே முதல்வர் பணியிடங்களை அரசு நிரப்பியிருக்க வேண்டும். ஆனால், நிலையான முதல்வர்களை நியமிப்பதற்கு மாறாக பொறுப்பு முதல்வர்களை மட்டுமே நியமித்து கல்லூரி நிர்வாகத்தை நடத்த தமிழக அரசு முயல்கிறது. இது தவறான அணுகுமுறை ஆகும்.

பள்ளிகள் தொடக்கம்

நிலையான முதல்வர்களுக்கு மாற்றாக பொறுப்பு முதல்வர்களைக் கொண்டு கல்லூரியை நடத்துவதால், கல்லூரியின் கல்வி மேம்பாட்டுப் பணிகள் பாதிக்கப்படுவது ஒருபுறமிருக்க அரசுக்கும் கூடுதல் செலவு ஆகிறது. தமிழக அரசு 2022-ஆம் ஆண்டில் பிறப்பித்த ஆணையின்படி, ஒரு கல்லூரியில் முதல்வர் பணியிடம் காலியாக இருந்தால் , அந்த இடத்தில் மூத்த இணைப் பேராசிரியர் ஒருவரை பொறுப்பு முதல்வராக நியமிக்க வேண்டும். அவ்வாறு நியமிக்கப்படுபவருக்கு அவரது மொத்த ஊதியத்தில் 20% அல்லது முதல்வர் பணிக்கான ஊதியத்தில் 50% , இவற்றில் எது குறைவோ அதை கூடுதல் ஊதியமாக வழங்க வேண்டும். அதன் மூலம் பொறுப்பு முதல்வருக்கு மாதம் ரூ.40,000 வரை கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும். இது நிலையான முதல்வருக்கு வழங்கப்படும் ஊதியத்தை விட அதிகம் ஆகும்.

கல்லூரிகளில் நிலையான முதல்வர்கள் இல்லாத சூழலில் மாணவர் சேர்க்கைப் பணிகள் கடுமையாக பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. அதையும், கல்லூரிகளின் கல்வி மேம்பாட்டுப் பணிகளையும் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள அனைத்து முதல்வர் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!” என வலியுறுத்தினார்.

சல்மா

இந்த விமர்சனம் தொடர்பாக தி.மு.க செய்தித்தொடர்பாளர் கவிஞர் சல்மாவிடம் விளக்கம் கேட்டபோது, “எந்த ஆட்சியிலும் இல்லாதவகையில் கல்வித்துறைக்கென மிக அதிகமான தொகையை பட்ஜெட்டில் ஒதுக்குவது தி.மு.க அரசுதான். புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டங்கள் மூலம் அரசுப் பள்ளியில் படித்த மாணவ மாணவிகளுக்கு மாதம் ரூ.1000, நான் முதல்வன் திட்டம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்திவருகிறோம். எந்த திட்டமாக இருந்தாலும் முறைப்படி அலசி ஆராய்ந்துதான் கொண்டுவருகிறோம். அதன்படி, அரசின் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்கள் பணி நியமனங்கள் பொதுவாக மே அல்லது நவம்பர் மாதங்களில்தான் வெளியிடப்படும். ஆனால், கடந்த மே மாதம் தேர்தல் சூழல் என்பதாலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதாலும் அந்த அறிவிப்பை வெளியிடமுடியில்லை.

அதேசமயம், ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான பட்டியல் ஏற்கெனவே தயார்நிலையில் இருக்கிறது. தற்போது அவர்களின் தகுதிகளை சரிபார்க்கும் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. விரைவில் இந்தப் பணிகளெல்லாம் முடிந்தபின்னர், இன்னும் சில நாட்களில் முறைப்படி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவிருக்கிறது. இதை முன்கூட்டியே தெரிந்துகொண்ட பா.ம.க ராமதாஸ் வேண்டுமென்றே விமர்சனம் செய்யும் வகையில் தற்போது அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இன்னும் சில நாட்களில் அரசின் அறிவிப்பு வெளியான பிறகு இது தனக்கு கிடைத்த வெற்றியாக விளம்பரப் படுத்திக்கொள்வார். தன்னை விளம்பரப்படுத்திக்கொள்வதற்காக வேண்டுமென்றே தி.மு.க அரசின் மீது விமர்சனம் செய்கிறார்” எனக் குற்றம்சாட்டினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.