வெல்வோம் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித்திட்டத்தின் கிளிநொச்சி மாவட்டத்திற்கான நடமாடும் சேவை இன்றும் நாளையும் (ஜூலை மாதம் 12- 13ம் திகதிகளில்) கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது
“வெல்வோம் ஸ்ரீலங்கா” நிகழ்ச்சித் திட்டத்தின் நடமாடும் சேவை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் நாடு முழுவதும் நடாத்தப்பட்டு வருகின்றமைக்கமைவாக இந்த நடமாடும் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்போது தொழில் திணைக்களத்தால் வழங்கப்படும் ஊழியர்களை பதிவு செய்தல், B பத்திரங்களை வழங்குதல், பின்னுரித்தாளிகள் மாற்றம் செய்தல், ஓய்வுக்கு முன்னரான ஊழியர் சேமலாப நிதி மீளளிப்பு நலன்களை பெற்றுக்கொள்ளல் என்பன தொடர்பான அறிவுறுத்தல்கள், 30% மீளளிப்பு நலனுக்கான உரித்துடமையை பரீட்சித்தல், ஊ.சே.நிதியை பிணையாக வைத்து வீட்டுக்கடன் பெற்று கொள்வது தொடர்பான வழிகாட்டல்கள், ஓய்வூதிய மீளளிப்பு நலன்களை பெற்றுக்கொள்வது தொடர்பான அறிவுரை, இறந்த ஊழியர்களின் பின்னுரித்தாளிகளுக்கு ஊழியர் சேமலாப நிதிய மீளளிப்புகளைப் பெற்றுக்கொள்ளல் தொடர்பான அறிவுரை, இஸ்ரேல் நாடு உள்ளிட்ட வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகளுக்கு பதிவு, பணிபுரிவோரை மதிக்கும் “பாராட்டு”, SMART YOUTH CLUB ஊடாக இளைஞர் யுவதிகளுக்கு தொழிற்பயிற்சி, ஆட்கடத்தல் மற்றும் பாதுகாப்பான புலம்பெயர்வு தொடர்பான விழிப்புணர்வு உள்ளிட்ட பல சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த நடமாடும் சேவையில் தொழிலாளர் திணைக்களம், இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம், ஊழியர் நம்பிக்கை நிதியம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள், சிறுதொழில் அபிவிருத்திபிரிவு, மனிதவலு மற்றும் வேலை வாய்ப்பு திணைக்களம், தொழிற்பயிற்சி அதிகாரசபை உள்ளிட்ட 40இற்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்கள் தமது சேவைகளை வழங்கவுள்ளன.
இச்சேவைகள் ஊடாக பயன்பெற எதிர்பார்ப்பவர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.