இந்தியாவின் மக்கள்தொகை 2060களின் முற்பகுதியில் 170 கோடியாக உயரும் என்றும் இந்த நூற்றாண்டு முழுவதும் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா இருக்கும் என்றும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரங்கள் துறையின் மக்கள்தொகை பிரிவு உலகின் மக்கள்தொகை தொடர்பாக நேற்று (ஜூலை 11) தனது அறிக்கையை வெளியிட்டது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: தற்போது (2024ல்) உலக மக்கள்தொகை 820 கோடியாக உள்ளது. வரும் 50-60 ஆண்டுகளுக்கு உலகில் மக்கள்தொகை தொடர்ந்து பெருகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 2080 களின் நடுப்பகுதியில் சுமார் 1030 கோடியாக அதிகரிக்கும். உச்சத்தை அடைந்த பிறகு, உலக மக்கள்தொகை படிப்படியாகக் குறையத் தொடங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த நூற்றாண்டின் இறுதியில் உலகின் மக்கள் தொகை 1020 கோடியாக குறையும்.
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருந்த சீனாவை கடந்த ஆண்டு பின்னுக்குத் தள்ளிய இந்தியா, 2100 ஆம் ஆண்டு வரை அந்த இடத்தில் தொடரும். அந்த வகையில், இந்த நூற்றாண்டு முழுவதும் உலகின் மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் மக்கள்தொகை 2060 களின் முற்பகுதியில் 170 கோடியாக அதன் உச்சத்தை எட்டிய பிறகு நூற்றாண்டின் இறுதியில் 12% குறையும்.
2024ல் இந்தியாவின் மக்கள்தொகை 145 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது 2054 இல் 169 கோடியாக உயரும். இதற்குப் பிறகு, இந்தியாவின் மக்கள்தொகை 2100 ஆம் ஆண்டின் இறுதியில் 150 கோடியாகக் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
2024ல் சீனாவின் மக்கள் தொகை 141 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2054ல் இது 121 கோடியாகக் குறையும் என்றும், 2100ல் 63.30 கோடியாக மேலும் குறையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகின் இரண்டாவது பெரிய மக்கள்தொகை கொண்ட நாடான சீனா, 2024 மற்றும் 2054க்கு இடையே 20.4 கோடி மக்கள் தொகையை இழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே காலகட்டத்தில், ஜப்பான் 2.1 கோடி மக்கள் தொகையையும், ரஷ்யா 1 கோடி மக்கள் தொகையையும் இழக்கும்.
சீனாவில் பெண்கள் கருவுருவது தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது ஒரு பெண்ணுக்கு ஒரு பிறப்பு என்ற அளவில் குழந்தை பிறப்பு உள்ளது. இதன் காரணமாக, இந்த நூற்றாண்டின் இறுதியில் சீன மக்கள் தொகை 78.6 கோடியாக குறையும். தற்போதைய மக்கள் தொகையில் தோராயமாக சரிபாதி குறையும். வேறு எந்தவொரு நாட்டிலும் இல்லாத மிகப்பெரிய மக்கள் தொகை வீழ்ச்சியை சீனா பதிவு செய்யக்கூடும். இவ்வாறு ஐ.நா மக்கள் தொகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.