திட்டமிட்ட காலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த வேண்டும்: ஜம்மு – காஷ்மீர் தலைவர்கள் வலியுறுத்தல்

ஸ்ரீநகர்: திட்டமிட்ட காலத்தில் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று அம்மாநிலத்தின் தலைவர்களான ஒமர் அப்துல்லா, சஜத் லோன் ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் கடைசியாக 2014-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. 2018 ஆம் ஆண்டு முதல் மத்திய ஆட்சியின் கீழ் இந்த யூனியன் பிரதேசம் உள்ளது. ஜம்மு காஷ்மீரில் வரும் செப்டம்பரில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியலை புதுப்பிக்கும் பணியை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரிக்கத் தொடங்கி உள்ளன. இதைக் கருத்தில் கொண்டு சட்டப்பேரவைத் தேர்தல் ஒத்திவைக்கப்படலாம் என்ற பேச்சுக்கள் எழுந்துள்ளன. ஜம்மு காஷ்மீரில் விரைவாக சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தி வரும் மாநில கட்சிகளுக்கு இது மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலை திட்டமிட்ட காலத்தில் நடத்த வேண்டும் என்று அவை வலியுறுத்தியுள்ளன.



இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஒமர் அப்துல்லா, “உங்களைத் தாக்கும் இந்த சக்திகளுக்கு முன்னால் நீங்கள் தலைவணங்க வேண்டும் என்றால், தேர்தலை நடத்தாதீர்கள். உங்கள் ராணுவம் மற்றும் காவல்துறையின் மேலாதிக்கத்தைவிட, தீவிரவாதத்தின் மேலாதிக்கம் பெரிது என ஒப்புக்கொள்வதாக இருந்தால் தேர்தலை நடத்த வேண்டாம். ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை உள்ளதா? ஆம் எனில், தேர்தல் சாத்தியமா? தற்போதைய நிலைமை 1996-ஐ விட மோசமாக இருந்தால், தேர்தலை நடத்த வேண்டாம்” என்று கூறினார்.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டுக் கட்சித் தலைவர் சஜத் லோன், “சட்டமன்றத் தேர்தலை உரிய நேரத்தில் நடத்துவது அவசியம். ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு பொறுப்பு கூறும் நிர்வாகத்துக்கு மட்டுமே ஆட்சி செய்ய, நிர்வகிக்க உரிமை உண்டு என்று நான் நம்புகிறேன். மக்களால் தேர்ந்தெடுக்கப்படக் கூடியவர் மோசமானவராக இருந்தாலும்கூட பரவாயில்லை. அந்நிய அரசாங்கத்தை விட அந்த அரசாங்கத்தை லட்சம் மடங்கு அதிகமாக நான் விரும்புவேன்.

ஆனால் அவர்கள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். இந்த மண்ணைச் சாராத ஒரு அரசு இங்கு இருப்பதை ஏற்க முடியாது. அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்கள் சொந்த மாநிலங்களில், இதுபோன்று தங்கள் மண்ணைச் சாராத அரசாங்கங்களை ஏற்றுக் கொள்வார்களா? தனிநபரைப் போல் செயல்படுவதை நிறுத்திவிட்டு ஒரு நிறுவனமாக மத்திய அரசு செயல்படத் தொடங்க வேண்டும்.

இந்த வலி முடிவுக்கு வர வேண்டும். ஜம்மு காஷ்மீரை முதலில் மாநிலமாக மீண்டும் மாற்ற வேண்டும். இது ஜம்மு காஷ்மீருக்கு காட்டப்படும் கருணை அல்ல; இது எங்கள் உரிமை. எனவே, தேர்தலை நடத்தி, அதிகாரத்தை புதிய அரசுக்கு வழங்குங்கள். நல்லதோ, கெட்டதோ நாட்டின் மற்ற பகுதிகளைப் போலவே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இங்கு ஆட்சி செய்ய வேண்டும். எந்த அரசும் சரியானது அல்ல. அப்படி எதுவுமே இருக்காது. குறைபாடுகள் இருந்தாலும், மற்ற மாநிலங்களைப் போலவே, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் பதவியேற்கட்டும். நீங்கள் உங்கள் சொந்த மக்களுடன் போரிடுகிறீர்கள் என்ற எண்ணம் ஜம்மு காஷ்மீரில் உள்ளது. மத்திய அரசு அதை மாற்ற வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.