கொழும்புத் தொடர் மாடி வீடுகளின் உரிமையாளர்கள் 50,000 பேருக்கான ரண்தொர உறுமய அளிப்புப் பத்திரங்களைக் கையளிக்கும் நடவடிக்கைகள் ஜூலை 17ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.
அதன்படி கொழும்புத் தொடர்மாடி வீட்டு உரிமையாளர்களின் அளிப்புப் பத்திரங்களை வழங்குவதற்கு முத்திரை மற்றும் நொத்தாரிசுக் கட்டணமாக 515 மில்லியன் ரூபா நிதியை வழங்குவதற்கு திறைசேரி இணக்கம் தெரிவித்துள்ளது.
2024ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட வரையறைக்கு இணங்க சம்பந்தப்பட்ட நிதியை ஒதுக்கீடு செய்வதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டப்ளியு. எஸ். சத்தியானந்தன் தெரிவித்தார்.
இந்த நிதி கொழும்பு மாவட்டத்தின் 3 தொடர் மாடி வீட்டுத் தொகுதிகளின் உரிமை அளிப்பு வழங்கலுக்காக திறைசேரியினால் வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வரவு செலவுத் திட்ட யோசனைக்கிணங்க கொழும்பு மாவட்டத்தின் தொடர் மாடி வீட்டுத் தொகுதியில் காணப்படும் வீடுகளின் உரிமையாளர்கள் 50000 பேருக்கு அளிப்புப் பத்திரங்களை வழங்கும் நடவடிக்கை இம்மாதம் 17ஆம் திகதி சுகததாஸ உள்ளக மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இவ்வாரம்ப வைபவத்தில் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான மிஹிது செத்புர, சிறிசர உயன மற்றும் மெற்ரோ வீட்டுத் தொகுதி போன்ற வீட்டுத் தொடர் மாடி வீட்டு உரிமையாளர்கள் மற்றும் தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்குச் சொந்தமான வீட்டுத் தொகுதிகளில் 1500 பேருக்கு உறுதி அளிப்புக்களை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அமைச்சின் செயலாளர் டபிள்யு. எஸ். சத்தியானந்த உரையாற்றுகையில் அளிப்புப் பத்திரங்களை வழங்குதல் அரசாங்கம் எடுத்த வரலாற்றுப் பெறுமதி மிக்க தீர்வாகும். இத்தொடர் மாடி வீட்டு உரிமையாளர்கள் பெரும்பாலானவர்களுக்கு சொந்தமான உரிமையை வழங்காமையினால் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்பட்டது.
இவ்வீடுகளில் வாடகைக்குக் கொடுப்பது கூட இதில் வசிப்பவர்களுக்குப் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் செயலாளர் தெளிவுபடுத்தினார்.
இவ்வளிப்புக்களை வழங்கும் போது அரச சட்டத்தரணிகளின் ஆலோசனைகள் பெறப்பட்டதாகவும், மற்றும் கூட்டு ஆதன முகாமைத்துவ அதிகாரசபையின் உத்தரவாதம் பெற்ற சகல தொடர் மாடி வீடுகளுக்காக இவ்வளிப்புக்கள் வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டப்ளியு. எஸ். சத்தியானந்தன் சுட்டிக்காட்டினார்.