புதுடெல்லி: “பிரதமர் மோடி நாட்டின் அடிப்படை பொருளாதார பிரச்சினைகள் மீது கவனம் செலுத்த வேண்டும்” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் தள பக்கத்தில் வெள்ளிக்கிழமை இந்தியில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: நரேந்திர மோடி அவர்களே, உங்களின் அரசாங்கம் கோடிக்கணக்கான மக்களை வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், சமத்துவமின்மை போன்ற படுகுழிக்குள் தள்ளிவிட்டுள்ளது. தாக்கல் செய்யப்படவிருக்கும் மத்திய பட்ஜெட்டுக்காக கேமிராக்களின் வெளிச்சத்தில் நீங்கள் கூட்டம் நடத்தும் வேளையில் நாட்டின் அடிப்படைப் பிரச்சினைகளிலும் கவனம் செலுத்துங்கள். உங்கள் தோல்விகளின் பட்டியல் நீளமானது. வேலைவாய்ப்பின்மை விகிதம் 9.2 சதவீதமாக உள்ள நிலையில் இளைஞர்களின் எதிர்காலம் பூஜ்ஜியமாக உள்ளது.
20-24 வயது வரை உள்ள இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 40 சதவீதமாக உயர்ந்துள்ளது, வேலைவாய்ப்புச் சந்தையில் இளைஞர்களுக்கான நெருக்கடியை எடுத்துக்காட்டுகிறது. விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும், 50 சதவீதம் எம்எஸ்பி போன்றவை பொய்யாகிப்போனது.
பெரும்பாலன அரசு பங்குகள் விற்கப்பட்டுள்ள 7 பொதுத்துறை நிறுவனங்களில் அதிக அளவிலான அரசு வேலைவாய்ப்பு இழப்புகள் ஏற்பட்டுள்ளது. இது பட்டியல் மற்றும் பழங்குடி, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான ஒதுக்கீடு இழப்புக்கு வழிவகுத்துள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு முதல் மோடி அரசு சிறிய அளவிலான பங்குகளை விற்ற 20 பொதுத்துறை நிறுவனங்களின் 1.25 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 16.5 சதவீதமாக இருந்த உற்பத்திக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம், மோடி ஆட்சியில் 14.5 சதவீதமாக குறைந்துள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளில் தனியார் முதலீடும் கடுமையாக சரிவடைந்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மிகவும் முக்கியமானதாக இருக்கும் புதிய தனியார் முதலீடு திட்டங்கள், கடந்த 20 ஆண்டுகளுக்கு இல்லாத அளவில், ஏப்ரல் மற்றும் ஜுன் வரையிலான காலத்தில் 44,300 கோடியாக குறைந்துள்ளது. இதே கால கட்டத்தில் கடந்த ஆண்டு தனியார் முதலீடு ரூ.7.9 கோடியாக இருந்தது.
ஊரக பகுதிகளில் கூலி உயர்வு விகிதம் எதிர்மறையாக உள்ளது. ஊரகப் பகுதிகளில் வேலைவாய்ப்பின்மை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது, கடந்த மே மாதத்தில் வேலைவாய்ப்பின்மை 6.3 சதவீதத்தில் இருந்து 9.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.
மோடி அவர்களே. பத்து ஆண்டுகளாகி விட்டது. மக்களின் அடிப்படை பிரச்சினைகளில் இருந்து அரசை விலக்கி வைக்க நீங்கள் உங்களின் விளம்பர யுக்தியை பயன்படுத்தினீர்கள். ஆனால் இனியும் இது வேலை செய்யாது. ஜுன் 2024-க்கு பின்னர் மக்கள் கணக்கு கேட்கத் தொடங்கியுள்ளனர். தன்னிச்சையான முறையில் நாட்டின் பொருளாதாரத்தை சிதைப்பது நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறு கார்கே தெரிவித்துள்ளார்.