புதுடெல்லி: “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை பதவி விலக நீதிமன்றம் அறிவுறுத்த முடியுமா அல்லது முதல்வராகவோ, அமைச்சராகவோ செயல்படக் கூடாது என்று உத்தரவிட முடியுமா என்பதில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது” என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பதவி குறித்து உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தில் அமலாக்கத் துறை தன்னை கைது செய்தது தவறு என்றுகூறி உச்ச நீதிமன்றத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு இன்று (ஜூலை 12) உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது. அதில் கேஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் அளிக்கப்பட்டது. இடைக்கால ஜாமீன் கிடைத்தாலும், இதே ஊழல் தொடர்பாக சிபிஐ தொடர்ந்த வழக்கால் கேஜ்ரிவால் தொடர்ந்து சிறையில் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, பணமோசடி தொடர்பாக அமலாக்கத்துறை கைது செய்தது முதல் கேஜ்ரிவால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என போராட்டங்கள் மூலமாக தொடர்ந்து பாஜக நெருக்கடி கொடுத்து வருகிறது. எனினும், ‘முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என்றதுடன், சிறையில் இருந்து மக்களுக்க்காக பணியாற்றுவேன்’ எனக் கூறி கேஜ்ரிவால் ராஜினாமா செய்ய மறுத்து வருகிறார்.
இந்நிலையில்தான் இன்றைய தீர்ப்பின்போது கேஜ்ரிவாலின் முதல்வர் பதவி குறித்து உச்ச நீதிமன்றம் கருத்து கூறியுள்ளது. நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை பதவி விலக நீதிமன்றம் அறிவுறுத்த முடியுமா அல்லது முதல்வராகவோ, அமைச்சராகவோ செயல்படக் கூடாது என்று உத்தரவிட முடியுமா என்பதில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது.
கேஜ்ரிவால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர், அதுவும் டெல்லியின் முதல்வர் என்பதில் நாங்கள் கவனமாக உள்ளோம். அவர் வகிக்கும் பதவி முக்கியத்துவமும், செல்வாக்கும் கொண்ட பதவி. அதனால், நாங்கள் எந்த வழிகாட்டுதலையும் வழங்கப்போவதில்லை. மாறாக, முதல்வர் பதவி குறித்த முடிவை கேஜ்ரிவால் வசமே விட்டுவிடுகிறோம்” என்று முதல்வர் பதவி குறித்து விரிவாக பேசினர்.
முன்னதாக, கேஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பேசிய நீதிபதிகள், “90 நாட்களுக்கு மேல் அரவிந்த் கேஜ்ரிவால் சிறையில் துயரப்பட்டிருக்கிறார். பிணையில் ஒருவர் வெளியில் வருவதற்கும், அவர்களிடம் விசாரணை நடத்துவதற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. பிணை கிடைத்து வெளியே வந்தால் அவரிடம் விசாரணை நடத்த முடியாது என்பதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. தேவைப்பட்டால் அமலாக்கத் துறை கேஜ்ரிவாலிடம் விசாரணை மேற்கொள்ளலாம். வெறும் விசாரணைக்காக மட்டும் குற்றம்சாட்டப்பட்டவரை கைது செய்ய அனுமதிக்க மாட்டோம். அதனை நாங்கள் நம்புகிறோம்.
கேஜ்ரிவால் ஒரு மாநிலத்தின் முதல்வராக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவராக உள்ளார். அவருக்கென்று சில உரிமைகள் உள்ளன. அப்படிப்பட்டவர் 90 நாட்களுக்கு மேல் சிறையில் இருக்கிறார். இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு கேஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குகிறோம்” என்று தெரிவித்தனர்.