பிரதமர் மோடி படத்துடன் போஸ்டர்: அம்பானி இல்லத் திருமண விழாவில் அரசியல் சர்ச்சை!

மும்பை: விவிஐபி விருந்தினர்கள், தொடர் கொண்டாட்டம், ஆடம்பரச் செலவு போன்ற விஷயங்களுக்காக பெரிதும் பேசப்பட்ட இந்தியாவின் பெரும் பணக்காரரான அம்பானி இல்லத் திருமண விழா தொடர்பான போஸ்டரில் பிரதமர் மோடியின் படம் இடம்பெற்றிருந்தது திடீர் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி (29) – ராதிகா மெர்சண்ட் திருமணத்தையொட்டி, மும்பை விழா கோலம் பூண்டுள்ளது. இதனிடையே, அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸுக்கு சொந்தமான ஜியோ வோர்ல்ட் கன்வென்ஷன் சென்டருக்குச் செல்லும் சாலையில், ஆளுங்கட்சி (பாஜக) தொண்டர்கள் சிலரால் பிரதமர் மோடியின் படத்துடன் வைக்கப்பட்டுள்ள சில போஸ்டர்கள் கவனம் ஈர்த்துள்ளது. அதில், “இந்தியாவின் அன்புக்குரிய, விருப்பத்துக்குரிய பிரதமர் நரேந்திர மோடிக்கு மும்பையின் இதயபூர்வமான வரவேற்பு” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டுள்ள விருந்தினர்கள் பட்டியலில் பிரதமர் மோடியின் பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் நடைபெறும் பாந்த்ரா குர்லா காம்ப்லக்ஸ் மாவட்டத்தைச் சேர்ந்த போக்குவரத்துத் துறை அதிகாரி மனோஜ் ஷிண்டே கூறுகையில், “நிகழ்ச்சி ஒன்றை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி மும்பை வருகிறார். அப்போது சிறிது நேரம் அம்பானி வீட்டு திருமணத்தில் கலந்து கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார். அந்த போஸ்டர்கள் பாஜகவால் வைக்கப்படவில்லை என்றாலும், ஆர்வம் மிக்கத் தொண்டர்கள் வைக்கப்பட்டிருக்கலாம் என்று மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் கேசவ் உபாத்யே தெரிவித்துள்ளார்.



அம்பானி போன்ற தொழிலதிபர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி மிகவும் நெருக்கமான உறவு வைத்துள்ளார் என்று இண்டியா கூட்டணிக் கட்சிகள் குற்றம்சாட்டி, கடுமையாக விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் கோபம்: இதனிடையே சர்வதேச, தேசிய அளவிலான பிரபலங்கள், அரசியல்வாதிகள் மற்றும் வணிகத் தலைவர்கள் பலர் அம்பானி வீட்டு திருமண நிகழ்வில் கலந்துகொள்ள இருப்பதால் உள்ளூர் அதிகாரிகள் இந்த நிகழ்வை ஒரு பொது நிகழ்ச்சியாகவே கருதுகின்றனர். இதனால், திருமண நிகழ்வு நடைபெறும் நான்கு நாட்களும் அந்த பகுதி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது மும்பை உள்ளூர் மக்களிடம் கோபத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.

இதனிடையே, பாப் நட்சத்திரங்களான ரியானா மற்றும் ஜஸ்டின் பீபர் கலந்துகொண்ட, ஒரு மாத காலத்துக்கு நீண்ட திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சிக்காக மில்லியன் கணக்கான பணத்தை அம்பானி குடும்பத்தினர் செலவளித்தனர். இது வருமான ஏற்றத்தாழ்வு அதிகமுள்ள இந்தியாவில் பல விவாதங்களை கிளப்பியது. இந்த நிகழ்வுகள் பொருளாதாரத்தை உயர்த்த வழிவகுப்பதாகவும், பலருக்கு வணிக வாய்ப்புகளை உருவாக்குவதாகவும் சிலர் தெரிவித்திருந்தனர். என்றாலும், பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் விமர்சனங்களையும் முன்வைத்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.