லண்டன்,
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதன் முதலாவது டெஸ்ட் லண்டன் லார்ட்சில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.அதன்படி தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் முதல் நாளிலேயே 121 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 371 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. பின்னர் 250 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். நேற்று 2-வது நாள் முடிவில் அந்த அணி 6 விக்கெட்டுகளை இழந்து 79 ரன்கள் மட்டுமே எடுத்தது. இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்றது.இங்கிலாந்து தரப்பில் அட்கின்சன் 5 விக்கெட்டும் ஆண்டர்சன் 3 விக்கெட்டும் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்
இதில் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 136 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்து ஆட்டமிழந்தது. இதனால் இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில், இந்த போட்டியுடன் இங்கிலாந்து அணியின் ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு இரு அணி வீரர்களும் பிரியா விடை கொடுத்தனர். 22 ஆண்டுகளாக இங்கிலாந்து அணிக்காக விளையாடிய அவர் மொத்தமாக 991 விக்கெட்டும், டெஸ்ட் போட்டியில் மட்டும் 188 போட்டிகள் விளையாடி 704 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஆண்டர்சன் 3-வது இடத்தில் உள்ளார்.