டெல் அவில்: காசா நகரம் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், காசாவின் தல் அல்-ஹவா மற்றும் அல்-சினா பகுதிகளில் 40 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும், மேலும் பலர் இடிபாடுகளுக்கு அடியில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
காசா நகரின் தொழிற்சாலை பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளது. காசா நகரில் இருந்து மக்கள் உடனடியாக வெளியேறி தெற்கு நோக்கி நகர வேண்டும் என இஸ்ரேல் ராணுவம் அறிவித்ததன் அடுத்த நாள் இப்படியான நெருக்கடிநிலை ஏற்பட்டுள்ளது. அதாவது, மக்கள் வெளியேற முடியாமல் குடியிருப்புக்குள் சிக்கிக்கொண்டுள்ளதாகவும், பலர் குடியிருப்புக்குள்ளேயே கொல்லப்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது. காசாவின் தெற்கு நகரமான ரஃபாவில் குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டனர், அவர்களின் உடல்கள் கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளன.
அதோடு, மத்திய காசாவில் உள்ள நுசிராட் அகதிகள் முகாமில் குறைந்தது மேலும் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். அக்டோபர் 7 முதல் காசா மீதான இஸ்ரேலின் போரில் 38,345 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 88,295 பேர் காயமடைந்துள்ளனர். ஹமாஸ் தலைமையிலான தாக்குதல்களில் இஸ்ரேலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,139 என மதிப்பிடப்பட்டுள்ளது, மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் காசாவில் இன்னும் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலிய ராணுவம் அப்பகுதியிலிருந்து வெளியேறுவதற்கு முன்னர் வீடுகளை தீயிட்டுக் கொளுத்தியதையும் அவர்கள் உறுதிப்படுத்தினர். சேதமடைந்த உள்கட்டமைப்பு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக மீட்புக் குழுவினர் நடந்தே இந்தப் பகுதிகளை அடைய வேண்டியிருந்தது. இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காசா போர்நிறுத்த கட்டமைப்பை ஆதரிப்பதாக வலியுறுத்துகிறார், ஆனால், ஹமாஸ் அதற்கு முரணான கோரிக்கைகளை முன்வைப்பதாகவும் குற்றம் சாட்டினார்.