பழநி: பழநி தேவஸ்தானத்தை கண்டித்து, நாளை காலை 6 முதல் மாலை 6 மணி வரை கவன ஈர்ப்பு கடையடைப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் 3 கி.மீ. தூரம் கிரிவலப்பாதை உள்ளது. இப்பாதையில் பக்தர்களுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகள், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்பட்டு தனியார் வாகனங்கள் நுழையத் தடைய விதிக்கப்பட்டுள்ளது. பழநி கோயில் நிர்வாகம் சார்பில், பக்தர்கள் சென்று வர வசதியாக பேட்டரி கார்கள், மினி மற்றும் மின்சார பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், பழநி சந்நிதி வீதி, பூங்கா சாலை, இட்டேரி சாலை, அய்யம்புள்ளி சாலையை கோயில் வசம் ஒப்படைக்க கோரி, தேவஸ்தான நிர்வாகம் நீதிமன்றம் வழியாக நகராட்சியை நிர்பந்தம் செய்து வருகிறது. இந்நிலையில், முத்தமிழ் முருகன் மாநாடு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஒருங்கிணைப்பு குழு மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நாளை பழநியில் நடைபெற உள்ளது. இதில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பங்கேற்க உள்ளார்.
அமைச்சர் வருகையை முன்னிட்டு பழநி நகர மக்களின் பொது வழிப்பாதை உரிமைகளை பாதுக்கவும், நகராட்சியின் உரிமைகளை முடக்கும் தேவஸ்தானத்தை கண்டித்தும் நாளை கவன ஈர்ப்பு கடையடைப்பு போராட்டம் நடத்துவது என நகராட்சி கவுன்சிலர்கள், வணிகர்கள் சங்கம், ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் முடிவு செய்யப்பட்டது.
இதற்கு ஆதரவு கேட்டு, இன்று நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி தலைமையில் கவுன்சிலர்கள் கடை கடையாகச் சென்று வியாபாரிகளடம் துண்டுப் பிரசுரம் வழங்கினர். நாளை காலை 6 முதல் மாலை 6 மணி வரை ஹோட்டல்கள், டீக்கடைகள், காய்கறி கடைகள் உள்ளிட்ட கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.