சென்னை: கள்ளச் சாராயம் தயாரித்து விற்பவருக்கு ஆயுள்கால கடுங்காவல் சிறை தண்டனையுடன், ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கும் வகையில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து சமீபத்தில் 66 பேர் உயிரிழந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, கள்ளச் சாராயத்தை முற்றிலும் ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் விதமாக, தற்போது அமலில் உள்ள 1937-ம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜூன் 28-ம் தேதி அறிவித்தார். அதன்படி, சட்டப்பேரவையில் சட்டத் திருத்த மசோதாவை மது விலக்கு, ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி ஜூன் 29-ம் தேதி தாக்கல் செய்தார். உறுப்பினர்களின் விவாதத்துக்கு பிறகு, அன்றைய தினமே பேரவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள 1937-ம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின்படி, விதிகளை மீறி மது ஏற்றுமதி – இறக்குமதி செய்வது, மது அருந்துவது ஆகிய குற்றங்களுக்கு தண்டனை வழங்கப்படுகிறது.
இதேபோல, மனித உயிருக்கு கேடு விளைவிக்கும் கள்ளச் சாராயத்தை தயாரிப்பது, இருப்பு வைத்திருப்பது, விற்பனை செய்வது போன்று, வழக்கமாக ஈடுபடும் குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனை போதுமானதாக இல்லை என்று கருதப்படுவதால் இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்படுகிறது.
தமிழகத்தில் இருந்து கள்ளச் சாராயத்தின் அச்சுறுத்தலை முற்றிலுமாக ஒழிப்பது அவசியம் என்றும்அரசு கருதுகிறது. கள்ளச் சாராயத்துடன் கலக்கப்படும் எரிசாராயம்,மெத்தனால் போன்ற தடைசெய்யப்பட்ட மதுபானங்களால், விலை மதிப்பற்ற உயிர்களை இழக்க நேரிடுவதால், கள்ளச் சாராயவிற்பனையை தடுக்க தண்டனையை அதிகரிப்பதும் அவசியமாகிறது.
இதற்காக கொண்டு வரப்பட்டுள்ள சட்டத்தில், சிறை தண்டனையின் கால அளவு, அபராதம் ஆகியவை அதிகரிக்கப்பட்டுள்ளது. மதுவை தயாரிப்பது, கொண்டு செல்வது, வைத்திருப்பது, குடிப்பது ஆகியவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தடை செய்யப்பட்ட மதுவை குடித்து உயிரிழப்பு ஏற்பட்டால், அதை தயாரித்து விற்றவருக்கு ஆயுள்காலம் வரை கடுங்காவல் சிறை தண்டனையுடன், ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்படுகிறது.
உரிமம் இல்லாத இடத்துக்கு சீல்: இதுதொடர்பான குற்றங்களில் பயன்படுத்தப்பட்ட அனைத்து அசையும் சொத்துகளும் பறிமுதல்செய்யப்படும். மது குடிக்க பயன்படுத்தப்படும் உரிமம் இல்லாத இடங்களை மூடி சீல் வைக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோர் எதிர்காலத்தில் மீண்டும் இதே குற்றங்களை செய்யாமல் தடுப்பதற்கு, கணிசமான உத்தரவாத தொகையுடன் கூடியபிணை பத்திரத்தை நிறைவேற்றுவதற்கும் நிர்வாகத் துறை நடுவருக்கு அதிகாரம் அளிக்க வழிவகை செய்யும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டு தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரை அந்த பகுதியில் இருந்தே விலக்கி வைக்க, நீதிமன்றத்தில் மதுவிலக்கு அதிகாரி அல்லது புலனாய்வு அதிகாரி விண்ணப்பம் செய்யவும் சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
கள்ளச் சாராயத்தை முற்றிலும் ஒழிக்கும் விதமாக, இதில் ஈடுபடுபவர்கள், பயன்படுத்தப்படும் பொருட்கள், இடம் என அனைத்தையும் வரைமுறை செய்து, அதற்கான தண்டனைகள், அபராததொகையை அதிகரித்து, உரியநடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்குவதற்கான வழிவகையும் ஏற்படுத்தி சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உறுப்பினர்களின் விவாதத்தை தொடர்ந்து, சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், மதுவிலக்கு திருத்த சட்டத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
இதையடுத்து, இந்த சட்டத்திருத்தம் அரசிதழில் வெளியிடப்பட்டு அமலுக்கு வரும்.