இந்த தகுதி இருந்தால் மட்டுமே இந்திய அணியில் இடம்! கவுதம் கம்பீர் அதிரடி!

Gautam Gambhir: இந்திய அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள கவுதம் கம்பீர், இனி இந்திய அணியில் வீரர்களின் தேர்வு எப்படி இருக்கும் மற்றும் அவரது அணுகுமுறை குறித்து தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வீரர்களும் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து கிரிக்கெட்டிலும் பங்கு பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ராகுல் ட்ராவிட்டிற்கு பிறகு பொறுப்பேற்றுள்ள கம்பீர் இந்திய அணியில் பல அதிரடி மாற்றங்களை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டி20 உலக கோப்பையை வென்றவுடன் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகிய மூன்று பேரும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளனர். இந்நிலையில், ஒவ்வொரு பார்மெட்டிற்கும் ஒவ்வொரு அணிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அனைத்து வீரர்களும் மூன்று வடிவங்களிலும் விளையாட வேண்டும் என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.

“நான் ஒரு விஷயத்தில் மிகவும் உறுதியாக இருக்கிறேன். ஒவ்வொரு வீரரும் டெஸ்ட், டி20, ஒருநாள் போட்டி என மூன்று வடிவங்களிலும் விளையாட வேண்டும். விளையாட்டில் காயங்கள் ஏற்படுவது சகஜம் தான், அதில் இருந்து மீண்டு வந்து அவர்களது முழு திறனை வெளிப்படுத்த வேண்டும். இவர் டெஸ்ட் வீரர், இவர் டி20 வீரர் என்ற முத்திரை கொடுக்க கூடாது. காயம் ஏற்படுவது ஒரு விளையாட்டு வீரரின் வாழ்க்கையில் உள்ள ஒரு அம்சம். ஆனால் மூன்று வடிவங்களிலும் விளையாட வேண்டும். உங்கள் நாட்டிற்காக விளையாடும் போது, ​​உங்களால் முடிந்த அனைத்தையும் கொடுக்க வேண்டும். நீங்கள் சிறந்த பார்மில் இருக்கும் போது அனைத்து வித கிரிக்கெட்டிலும் விளையாட வேண்டும். உங்கள் தொழிலில் உங்களால் முடிந்தவரை நேர்மையாக இருக்க வேண்டும்.

நான் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த போது என்னுடைய ​​​​முடிவுகளை பற்றி நான் ஒருபோதும் நினைத்ததில்லை. கிரிக்கெட்டில் ரன்களை அடிக்க, அதன் மீது நேர்மையாக இருக்க வேண்டும். எந்த தடைகள் வந்தாலும் அதனை எதிர்த்து உங்களது 100% கொடுக்க வேண்டும். சில சமயம் அணியின் நலனுக்காகவும் சிலவற்றை இழக்க நேரிடும். களத்தில் நான் பல சமயம் ஆக்ரோஷமாக இருந்து இருக்கிறேன். வீரர்களுடன் மோதலில் ஈடுபட்டுளேன். ஆனால் அது அணியின் நலனுக்காக மட்டுமே தவிர, என்னுடைய தனிப்பட்ட காரணங்கள் இல்லை. அணிதான் எனக்கு முக்கியமே தவிர, வேறு எதுவும் இல்லை. எந்த அணிக்காக விளையாடினாலும், அந்த அணியை வெற்றிபெற செய்ய வேண்டும். அதை பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும்” கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

கவுதம் கம்பீர் செய்துள்ள சாதனைகள்

கவுதம் கம்பீர் தனது ஆக்ரோஷமான முகத்திற்காக பெயர் பெற்றவர். ஐபிஎல்லிலும் சரி, சர்வதேச கிரிக்கெட்டிலும் சரி பலருடன் சண்டை செய்துள்ளார். அவரது ஆக்ரோஷம் பல சமயங்களில் வெற்றியை தந்துள்ளது. ஐபிஎல்லில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளின் வழிகாட்டியாக இருந்துள்ளார். அவர் வழிகாட்டியாக இருந்த காலத்தில் அவரது ஆக்ரோஷமான அணுகுமுறை விளையாட்டின் மீதான அவரது ஆர்வத்தை காட்டுகிறது. கிரிக்கெட்டில் கூடுதல் கவனம் செலுத்துவதற்காக இந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. கடந்த 2019 தேர்தலில் டெல்லியில் போட்டியிட்டு வெற்றி பெற்று இருந்தார். 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலக கோப்பை வென்ற அணியில் இடம் பிடித்துள்ளார் கம்பீர். மேலும் இந்த இரண்டு பைனல் போட்டிகளிலும் முக்கியமான ரன்கள் அடித்துள்ளார். மேலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக 2012 மற்றும் 2014ல் ஐபிஎல் பட்டத்தை வென்றுள்ளார். இந்த ஆண்டு ஐபிஎல்லில் கேகேஆர் அணியின் வழிகாட்டியாக இருந்து கோப்பையை வெல்ல உதவியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.