நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் துரைமுருகன் ஜூலை 11-ம் தேதி காலை கைதான நிலையில், அன்றிரவே அவரை விடுவித்திருக்கிறது திருச்சி கணினிசார் குற்றப்பிரிவு நீதிமன்றம். இந்நிலையில் துரைமுருகனை சிறையிலடைக்கும் முயற்சியில் அப்பட்டமாக தோற்றுப்போயிருப்பதாக தமிழ்நாடு அரசை விமர்சிக்கிறார்கள் எதிர்க்கட்சியினர்.
நம்மிடம் பேசிய விவரமறிந்தவர்கள், “முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை விமர்சிக்கும் வகையில் அமைந்திருந்த பாடலை விக்கிரவாண்டி இடைத் தேர்தல் பிரசாரத்தில் பாடியதற்காக நா.த.க-வின் துரைமுருகனை தென்காசி மாவட்ட குற்றாலத்தில் வைத்து கைது செய்தது திருச்சி சைபர் க்ரைம் காவல்துறை. பட்டியின சாதியை இழிப்படுத்தினார் என வன்கொடுமை தடுப்புச் சட்டத்திலும் வழக்குகள் பதியப்பட்டன. ஜூலை 11-ம் தேதி இரவு கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் 15 நாள்கள் ரிமாண்ட் செய்வதற்காக ஆஜர்படுத்தியபோது போலீஸாரின் கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார். இந்நிலையில் கைது செய்தும் சிறைப்படுத்த முடியாமல் போனதால் தி.மு.க அரசின் இமேஜ் டேமேஜ் ஆகிவிட்டதாக கிண்டல் செய்து வருகிறார்கள் நா.த.க-வினர்.
நம்மிடம் பேசிய அ.தி.மு.க-வின் ஐடி விங் துணைச் செயலாளர் சி.டி.ஆர் நிர்மல்குமார், “கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், கடத்தல்காரர்கள், பாலியல் வன்கொடுமையாளர்கள் போன்றோர் சுதந்திரமாக நடமாடி வரும் நிலையில் விடியா தி.மு.க ஆட்சியில், அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் மீதும் சர்வாதிகார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது தொடர்கதையாகிவிட்டது.
அ.தி.மு.க ஆட்சியில் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சரை வைத்து அலங்கோலமாக காட்டூன் வெளியிட்டதாக ஒரு கைது நடந்தது. ஆனால் தி.மு.க ஆட்சியில் பேசியதற்கே குற்றவியல் வழக்கா… காவல்துறைக்கு தி.மு.க தரப்பின் அழுத்தமே இதுபோன்ற குளறுபடிகளுக்கு காரணம். `இவரை உடனடியாக கைது செய்யுங்கள்’ என உத்தரவிடுகிறது தி.மு.க தலைமை. வேறு வழியில்லாமல் நெருக்கடியில் முகாந்திரமில்லாத ஒரு வழக்கைப் போட்டு கைது செய்கிறார்கள். பாசிச பா.ஜ.க-வுக்கு தி.மு.க-வுக்கு எந்தவொரு வித்தியாசமுமில்லை என்பதை ஒவ்வொருமுறையும் நிரூபிக்கிறார்கள்” என்றார்.
நம்மிடம் பேசிய நா.த.க-வினர் சிலர், “துரைமுருகனை சிறையிலடைக்க முயன்றது, அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கை, காவல்துறையின் வெளிப்படையான அதிகார முறைகேடு. பாடல் எழுதியவர், பாடியவர் எதுவும் செய்யாமல் எடுத்து பாடியவரை கைது செய்வது அராஜகத்தின் உச்சம்
எங்கள் நோக்கம் கருணாநிதி மீதான விமர்சனமே ஒழிய, அப்படி ஒரு சமூக மக்கள் இருக்கிறார்கள் என்றோ அவர்களை இழிவுசெய்ய வேண்டுமென்பதோ இல்லை. விமர்சனங்களை பொறுத்துக் கொள்ளாத பாசிச தி.மு.க-வின் அதிகார வெறிக்கு குட்டு வைத்திருக்கிறது நீதிமன்றம். கண்மூடித்தனமான அடக்குறையை கட்டவிழ்த்துவிடும் தி.மு.க அரசை முட்டுச்சந்தில் நிறுத்தியிருக்கிறது அதன் தலைமை. அவ்வளவுதான்” என்றனர்.
நம்மிடம் பேசிய தி.மு.க செய்தி தொடர்பாளர் சல்மா “ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் விதமாகவே செயல்படுகிறது தமிழ்நாடு அரசு. ஆனால், எல்லைமீறி மறைந்த தலைவர்களையும் இழித்து பேசும்போதும் சட்டம் ஒழுங்கு பிரச்னையை கிளப்ப முற்படும்போதும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? அரசியல் அரைவேக்காடு சீமான் தான் பணம் சம்பாதிப்பதற்காக கட்சியினரை துருப்பு சீட்டாக பயன்படுத்துகிறார். இதெல்லாம் ஒரு கட்சித் தலைவருக்கான பண்பா? இப்படி மறைந்த தலைவரை பேசி அதில் குளிர்காயும் அவரின் மனநிலையை சோதனைக்குட்படுத்த வேண்டும். அதுமட்டுமில்லாமல் தான் கடந்தகாலங்களில் பேசியதையே மறந்து பச்சோந்தித்தனமாக இப்போது பேசிவருகிறார்.
தி.மு.க ஆட்சிமீது களங்கம் ஏற்படுத்த எடப்பாடியிடம் வாங்க வேண்டியதை வாங்கிக்கொண்டு ஜால்ரா அடிக்கிறார். வாய்த்துடுக்காக பேசும் சீமானுக்கு நாவடக்கம் தேவை. புகாரின் அடிப்படையில் துரைமுருகன் கைது செய்தது நியாயமான நடவடிக்கையே. நீதிபதி இப்படியொரு முடிவை வழங்கியிருப்பதால் தி.மு.க அரசுக்கு டேமேஜ் எனப் பேசுவது நா.த.க-வின் இழிவான செயல்பாடுகளுக்கு வக்காலத்து வாங்குவதே..!” என்றார் கொதிப்புடன்.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88