அபுஜா: நைஜீரியாவில் இரண்டு மாடி பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 22 மாணவர்கள் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீட்கப்பட்டனர்.
வட-மத்திய ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் ஜோஸ் நகரில் நேற்று (வெள்ளிக்கிழமை) வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, இரண்டு மாடி பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி 22 மாணவர்கள் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கிய 100 க்கும் மேற்பட்டவர்களை உள்ளூர் மக்களும், மீட்புப்படையினரும் இணைந்து மீட்டுள்ளனர்.
புசா புஜி என்ற சமூகத்திற்குச் சொந்தமான செயிண்ட்ஸ் அகாடமி கல்லூரியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் சிக்கிய மாணவர்கள் அனைவரும் 15 வயது மற்றும் அதற்கும் கீழான வயதுள்ள மாணவர்கள். கட்டிடம் இடிந்து விழுந்தபோது 154 மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கியதாகவும் அவர்களில் 22 மாணவர்கள் உயிரிழந்துவிட்டர் என்றும், 132 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
காயமடைந்த மாணவர்கள் அனைவரும் அருகில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். “உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, ஆவணங்கள் அல்லது கட்டணம் இல்லாமல் சிகிச்சை அளிக்குமாறு மருத்துவமனைகளுக்கு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது” என்று தகவல் ஆணையர் மூசா அஷோம்ஸ் தெரிவித்துள்ளார்.
கட்டிடத்தின் பலவீனமான அமைப்பு காரணமாகவும், ஆற்றங்கரைக்கு அருகில் கட்டப்பட்டதன் காரணமாகவும் இந்த விபத்து நேரிட்டிருப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தை அடுத்து, இதேபோன்ற நிலையில் உள்ள பள்ளிகளை மூடவும் அரசு உத்தரவிட்டுள்ளது.