சென்னை: “கள்ளக்குறிச்சி சோக சம்பவம், ஆம்ஸ்ட்ராங் கொலை என்ற இந்த இரண்டு மிகப்பெரிய சவால்களுக்கு மத்தியில், முதல்வர் ஸ்டாலினின் நேர்மையான ஆட்சியை மக்கள் ஏற்றுக்கொண்டு மகத்தான வெற்றியைக் கொடுத்துள்ளனர்.வெற்றி தேடித்தந்த விக்கிரவாண்டி தொகுதி மக்களுக்கு திமுக வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டிருக்கிறது.” என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக முன்னிலைப் பெற்று வரும் நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், “மக்களவைத் தேர்தலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்ட்ட இண்டியா கூட்டணி, இந்தியாவிலேயே தமிழகத்தில் நூற்றுக்கு நூறு என்ற அளவில் ஒரு மாபெரும் வெற்றியைப் பெற்றது. அந்த தேர்தல் முடிந்து ஒருசில நாட்களுக்குள் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்ப்டடது.
தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல் அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிக்கு, இந்தியாவில் வேறு எந்த அரசியல் கட்சிக்கும் வராத சவால்கள் எல்லாம் இந்த இடைத்தேர்தலின் போது ஏற்பட்டது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், விக்கிரவாண்டி தொகுதிக்கு மிக அருகில், அப்பகுதியை ஒட்டியுள்ள கள்ளக்குறிச்சியில் ஒரு சோக சம்பவம் நடைபெற்றது.
அது மிகப்பெரிய பூதாகரமாக இந்தியாவில் இருக்கக்கூடிய மத்திய அமைச்சர்கள் முதல் உள்ளூரில் இருக்கக்கூடிய பாஜக தலைவர்கள் ஆட்டம்போட்டு மிகப்பெரிய நாடகத்தை நடத்தினர். இந்த இடைத்தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும். நாற்பதுக்கு நாற்பது என்ற வெற்றியை எப்படியாவது குலைத்துவிட வேண்டும் என்று செயல்பட்டார்கள்.
அதுவும், தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பாக, சென்னையில் யாரும் எதிர்ப்பாராமல் நடந்த ஒரு கொலைக்கு அரசியல் சாயம் பூசப்பட்டது. அதையும் இந்த தேர்தலில் அரசியலாக்க முயற்சித்தார்கள். இந்த இரண்டு மிகப்பெரிய சவால்களுக்கு மத்தியில், முதல்வர் ஸ்டாலினின் நேர்மையான ஆட்சி, 3 ஆண்டு கால ஆட்சி நடத்திய முறையை மக்கள் ஏற்றுக்கொண்டு, யார் என்ன சொன்னாலும், யார் எதிர்த்தாலும், தூற்றினாலும், நாங்கள் உங்களோடு இருக்கிறோம் என்று மக்கள் நிரூபித்துக் காட்டியுள்ளனர். இந்த மகத்தான வெற்றியைத் தேடிக் கொடுத்த விக்கிரவாண்டி தொகுதி மக்களுக்கு திமுக வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டிருக்கிறது.” என்று கூறினார்.