இந்தியாவில் டீமேட் கணக்குகளின் எண்ணிக்கை கடந்த ஜூன் மாதத்தில் 16 கோடியை தாண்டியுள்ளது. இந்தியப் பங்குச் சந்தை தொடர்ந்து வளர்ச்சியை பதிவு செய்து வருவதால், ஏராளமான சிறு முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையை நோக்கி ஈர்க்கப்படுகின்றனர். இதனால், கடந்த சில ஆண்டுகளாக டீமேட் கணக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், கடந்த ஜூன் மாதத்தில் டீமேட் கணக்குகளின் எண்ணிக்கை முந்தைய மாதத்தை விட 42 லட்சம் உயர்ந்து 16.2 கோடியாக உள்ளது. அதாவது முந்தைய மாதத்தை விட 4.2 சதவிகிதம் அதிகரித்துள்ளன. நடப்பு நிதியாண்டில் மாதம் சராசரியாக 34 லட்சம் டீமேட் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
முந்தைய மே மாதத்தில் புதிதாக 36 லட்சம் டீமேட் கணக்குகள் தொடங்கப்பட்டிருந்தன. கடந்த மார்ச், ஏப்ரல், மே, ஜூன் ஆகிய நான்கு மாதங்களிலுமே தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் 40 லட்சத்துக்கு மேல் டீமேட் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
புரோக்கிங் நிறுவனங்களை எடுத்துக்கொண்டால், ஜீரோதா நிறுவனத்தில் டீமேட் கணக்குகளின் எண்ணிக்கை 2.1 சதவிகிதம் உயர்ந்து 77 லட்சமாக உள்ளது. குரோ நிறுவனத்தில் 5.4 சதவிகிதம் உயர்ந்து 1.09 கோடியாக உள்ளது. ஏஞ்செல் ஒன் நிறுவனத்தில் 3.4 சதவிகிதம் உயர்ந்து 67 லட்சமாக உள்ளது. அப்ஸ்டாக்ஸ் நிறுவனத்தில் 2.7 சதவிகிதம் உயர்ந்து 27 லட்சமாக உள்ளது.