இன்றைய கால கட்டத்தில், கம்ப்யூட்டர் என்னும் கணினி இல்லாத வீடே இல்லை என்ற நிலைமை வந்து விட்டது. ஆடம்பர பொருள் என்ற நிலையில் இருந்து அத்தியாவசிய பொருள் என்ற நிலைக்கு வந்து விட்ட கம்யூட்டரில், பிசி எனப்படும் டெஸ்க் டாப் கம்ப்யூட்டரை விட லேப்டாப் அதிக அளவில் பயபடுத்தப்படுகிறது. ஒரே இடத்தில் வேலை செய்யாமல் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லும் வசதியை அளிக்கும் மடிக்கணினி வேலைக்கு செல்பவர்களுக்கு இருக்க வேண்டிய மிக முக்கிய பொருளாக உள்ளது.
லேப்டாப் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் இயங்க, உங்கள் மடிக்கணினி வேகம் குறையாமல் இருக்க, சில எளிய டிப்ஸ்களை பின்பற்றுவது உதவும்
1. நாளாக நாளாக உங்கள் லேப்டாப்பில் தேவையற்ற கோப்புகள் மற்றும் புரோகிராம்கள் குவிந்து உங்கள் மடிக்கணினியின் வேகத்தைக் குறைக்கும். இந்த கோப்புகள் மற்றும் தேவையில்லாத பைல்களை நீக்குவதன் மூலம் உங்கள் மடிக்கணினி வேகமாக வேலை செய்யும். லேப்டாப்பில் ஸ்பேஸ் அதிகம் இருந்தால் வேகமும் அதிகரிக்கும்.
2. உங்கள் மடிக்கணினியின் செயல்திறன் மற்றும் பேட்டரி ஆயுளைப் பாதிக்கும் பல்வேறு பவர் செட்டிங் இருக்கும். “High Performance” என்ற செட்டிங், உங்கள் லேப்டாப்பை சிறப்பாக செயல்பட உதவும். ஆனால் இது பேட்டரி ஆயுளையும் குறைக்கலாம்.
3. மடிக்கணினி என்னும் லேப்டாப்பை (Laptop) படுக்கையில் அல்லது சோபாவில் வைத்து பயன்படுத்தக்கூடாது. இதன் காரணமாக, மடிக்கணினி அதிக வெப்பமடைந்து, சரியாக வேலை செய்யாமல் போகலாம்.
4. உங்கள் லேப்டாப் ஸ்கீரின் தோற்றத்தை கவர்ச்சிகரமாக ஆக்கும் பல அனிமேஷன்கள் மற்றும் விஷுவல் எஃபெக்ட்கள் விண்டோஸ் ஆப்ரேடிங் சிஸ்டத்தில் இருக்கும். ஆனால் அவை உங்கள் லேப்டாப் இயங்கும் வேகத்தை குறைக்கும். இந்த விஷுவல் எஃபெக்ட்களை ஆஃப் செய்வதன் மூலம் உங்கள் லேப்டாப்பின் செயல்திறனை மேம்படுத்தலாம்.
5. நீங்கள் மடிக்கணினியை இயக்கும் போது பல பிரோகிராம்கள் தானாகவே தொடங்கும் நிலையில் செட்டிங் செய்யப்பட்டிருக்கலாம், இது உங்கள் மடிக்கணினியின் வேகத்தைக் குறைக்கும். இந்த தேவையில்லாத ஸ்டார்ட்அப் புரோகிராம்களை மூடுவதன் மூலம், லோடிங் நேரத்தை குறைக்கலாம். இதன் மூலம் உங்கள் லேப்டாப்பை வேகப்படுத்தலாம்.
6. சிறந்த ஆண்டி-வைரஸ் மென்பொருள் சந்தையில் பல வகைகள் உள்ளன. அசல் உரிமத்துடன் உள்ள நல்ல ஆண்டி-வைரஸ் மென்பொருளை வாங்கி, லாப்டாப்பில் நிறுவுங்கள். லேப்டாப் செயல்திறனை வைரஸ் வெகுவாக பாதிக்கும். மடிக்கணினியின் வேகத்தை குறைப்பது முதல் அதனை முற்றிமலுமாக பழுதடைய செய்வது வரை, வைரஸ் பல வகையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
7. லேப்டாப்பை அதிக நேரம் தொடர்ச்சியாக இயக்குவது நல்லதல்ல. 8 மணி நேரத்திற்கு மேல் தொடர்ச்சியாக இயக்கத்தில் இருந்தால், மடிக்கணினி அதிகம் சூடாகும். சில மணி நேரத்தில் லேடப்டாப்பை அணைக்கவில்லை என்றால், அதன் செயல்பாட்டின் வேகம் குறைந்து விடும். மடிக்கணினியின் ஆயுள் நீடிக்க, உபயோகிக்காத நேரத்தில் ஷட் டௌன் செய்வது அவசியம்.
8. லேப்டாப்பை பயன்படுத்தும் போது, அதன் அருகில் தண்ணீர் பாட்டில், டீ போன்றவற்றை அருகில் வைத்துலக் கொண்டு அருந்துவதோ, அல்லது உணவுகளை வைத்துக் கொண்டு சாப்பிடுவதோ தவறு. தவறுதலாக, திரவ பொருட்கள் அதில் சிந்தி விட்டால், லாப்டாப் முற்றிலும் பழுதாகி விடும்.