Indian Cricket Team News Tamil : பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் 2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்த இருக்கிறது. ஐசிசி ஒருநாள் போட்டி தரவரிசைப் பட்டியலில் டாப் 8 இடங்களில் இருக்கும் அணிகள் நேரடியாக இப்போட்டியில் விளையாட இருக்கின்றன. அதன்படி, இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், நியூசிலாந்து ஆகிய அணிகள் விளையாட இருக்கின்றன. இதற்கான உத்தேச அட்டவணைப் பட்டியலை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐசிசி) அனுப்பியுள்ளது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்பது குறித்து இந்தியாவைத் தவிர மற்ற 7 அணிகளும் சம்மதம் தெரிவித்துவிட்டன. இந்திய அணி மட்டும் இதுவரை பாகிஸ்தான் நாட்டுக்கு செல்வது குறித்து எதுவும் சொல்லாமல் இருக்கிறது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 (50 ஓவர் மேட்ச்)
அதற்கு காரணம் இரு நாடுகளுக்கு இடையே இருக்கும் அரசியல் பிரச்சனைகள் காரணமாக 2008 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா பாகிஸ்தானுடனான அனைத்து விதமான உறவுகளையும் துண்டித்துக் கொண்டிருக்கிறது. ஐசிசி நடத்தும் கிரிக்கெட் தொடர்களைத் தவிர இரு அணிகளும் எந்தவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுவதில்லை. ஆனால், இம்முறை இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் வந்தே ஆக வேண்டும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் எதிர்பார்க்கிறது. அதற்கேற்ப இந்திய அணிக்கான அனைத்துவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து கொடுக்க தயாராக இருப்பதாவும், இந்திய அணி லாகூரில் மட்டுமே அனைத்து போட்டிகளிலும் விளையாடுமாறு போட்டி அட்டவணையை உருவாக்கப்பட்டிருப்பதாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இந்திய அணி தொடரில் இருந்து விலக முடிவு
ஆனால், இந்திய கிரிக்கெட் வாரியம் இந்திய அணியை பாகிஸ்தான் அனுப்ப தயாராக இல்லை. ஏனென்றால் மத்திய அரசு அனுமதி கொடுத்தால் மட்டுமே இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்ல முடியும் என்பதால் அரசின் அனுமதி கிடைக்க வாய்ப்பில்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இந்திய அணி ஹைபிரிட் மாடலில் சாம்பியன்ஸ் டிராபி போட்டியை நடத்துமாறு ஐசிசியிடம் கோரிக்கை வைத்தது. அதற்கு வாய்ப்பில்லை என இப்போதைக்கு ஐசிசியும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் தெரிவித்துவிட்டதாக தெரிகிறது. ஒருவேளை பாகிஸ்தானிலேயே சாம்பியன்ஸ் டிராபி போட்டி நடைபெற்றால் இந்திய அணி பங்கேற்காது என தெரிகிறது.
இலங்கை கிரிக்கெட் அணிக்கான வாய்ப்பு
அப்படி இந்திய அணி பங்கேற்காவிட்டால், அந்த இடத்துக்கு ஐசிசி ஒருநாள் போட்டி தரவரிசையில் 9வது இடத்தில் இருக்கும் இலங்கை அணி தகுதி பெறும். இந்த வாய்ப்பை தான் இலங்கை கிரிக்கெட் அணி எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. அதனால், இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பங்கேற்குமா? இல்லையா? என்பது இன்னும் ஒரு சில வாரங்களில் அதிகாரப்பூர்வமாக தெரிந்துவிடும்.