2007 ரிப்பீட்டு.. இந்தியா, பாகிஸ்தான் டி20 இறுதிப்போட்டியில் மோதல் – யுவ்ராஜ் சிங் சாதிப்பாரா?

India vs Pakistan: உலக சாம்பியன்ஸ் லெஜண்ட்ஸ் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் யுவ்ராஜ் சிங் தலைமையிலான இந்திய அணியும், யுனிஸ்கான் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோத இருகின்றன. இந்த இரு அணிகளிலும் இப்போது விளையாடும் வீரர்கள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) முதன்முதலாக 2007 ஆம் ஆண்டு நடத்திய டி20 உலக கோப்பையில் விளையாடி இருந்தார்கள். அப்போது நடந்த அந்த தொடரில் இந்தியா – பாகிஸ்தான் இடையே இரண்டு போட்டிகள் நடைபெற்று, இரண்டிலும் இந்திய அணியே வெற்றி பெற்று முதன்முறையாக டி20 உலகக்கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது. அந்த தொடரின் முதல் லீக் போட்டியில் இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி சமனில் முடிவடைய இந்தியா பவுலவுட் முறையில் வெற்றி பெற்றது. பின்னர் பரபரப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை வசமாக்கியது.

அதேபோன்றதொரு போட்டி தான் இன்று நடைபெற இருக்கும் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலக சாம்பியன்ஸ் லெஜண்ட்ஸ் லீக் போட்டியும். இந்த தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வெஸ்ட்இண்டீஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 6 அணிகள் இந்த தொடரில் பங்கேற்றிருந்தன. லீக் சுற்று மற்றும் அரையிறுதி சுற்றுகளின் முடிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. 

கேப்டன் யுவ்ராஜ் சிங் தலைமையிலான இந்திய அணியில் ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா, பதான் சகோதரர்கள், ஹர்பஜன் சிங், தவல் குல்கர்னி, ஹர்மீத் சிங் உள்ளிட்ட வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். பாகிஸ்தான் அணியில் ஷாகீத் அப்ரிடி, யுனுஸ்கான், சோயிப் மாலிக், கம்ரான் அக்மல், மிஷ்பா உல் ஹக், சோகைல் தன்வீர் உள்ளிட்டோர் இடம்பிடித்திருக்கின்றனர். இவ்விரு அணிகளுக்கு இடையே இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்ற லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றிருந்தது. அந்த போட்டியில் 250 ரன்களுக்கும் மேல் குவித்த அந்த அணி, இந்திய அணியை அந்த இலக்கை எட்டவிடாமல் தடுத்து வெற்றி வாகை சூடியது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய அணியும், 2007 ஆம் ஆண்டு 20 உலகக்கோப்பை தோல்விக்கு பழிதீர்க்கும் விதமாக பாகிஸ்தான் அணியும் களம் காண இருக்கின்றன. 

உலக லெஜண்ட்ஸ் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டி இங்கிலாந்தின் எட்ஜ்பஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது. இரவு 9 மணிக்கு தொடங்கும் இப்போட்டியை ஸ்டார்ஸ்போர்ட்ஸ் சேனலில் லைவ்வாக பார்த்து ரசிக்கலாம். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.