டெல்லி பல்கலைக்கழக சட்டப்படிப்பு பாடத்திட்டத்தில் மனுதர்மம்? தடுத்த துணைவேந்தர்..!

மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு கல்வியை காவிமயமாக்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில், டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பில் மனுதர்மத்தை சேர்க்க முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பான திட்டம் ஒப்புதல் பெற பல்கலைக்கழக உயர்மட்ட கமிட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதில், ஏற்கெனவே இருக்கும் ஜூரிஸ்ப்ரூடென்ஸ் (Jurisprudence) பேப்பரில் திருத்தம் செய்து மனுதர்மத்தை சேர்க்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டு இருந்தது.

இது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. முதல் மற்றும் 3-ம் ஆண்டு எல்.எல்.பி படிப்புக்கான பாடத்திட்டத்தில் மாற்றம் செய்து முதல் மற்றும் ஆறாவது செமஸ்டரில் மனுதர்மத்தை சேர்க்க பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், இதற்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கிருஷ்ணசாமி ஐயர் மற்றும் ஜி.என்.ஜா ஆகியோர் எழுதிய மனுதர்ம புத்தகங்களை பாடத்திட்டத்திற்கு பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பான திட்டத்திற்கு ஜூன் 24-ம் தேதி பல்கலைக்கழக பாடத்திட்டக்கமிட்டி ஒப்புதல் கொடுத்து இருந்தது.

ஆனால், இடதுசாரிகளை கொண்ட சோஷியல் ஜனநாயக ஆசிரியர் கூட்டணி இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக துணைவேந்தருக்கு கடிதம் எழுதியது. அதில், ’மனுதர்மத்தின் பல பகுதிகளில் பெண் கல்வி மற்றும் சம உரிமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மனுதர்மத்தை அறிமுகம் செய்வது கல்வி முன்னேற்றத்திற்கு எதிரானது மட்டுமல்லாது நாட்டின் அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்புக்கு எதிரானது. எனவே, இது தொடர்பான திட்டத்திற்கு அனுமதி கொடுக்கக்கூடாது. அதனை திரும்ப பெறவேண்டும்”என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதையடுத்து, பல்கலைக்கழக உயர்மட்ட கமிட்டி கூட்டத்தில், மனுதர்மத்தை பாடத்திட்டத்தில் சேர்க்கும் முடிவை துணைவேந்தர் யோகேஷ் சிங் நிராகரித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், ’ஜூரிஸ்ப்ரூடென்ஸ் பாடத்திட்டத்தில் மனுதர்மத்தை சேர்க்கும் வகையில் திருத்தம் செய்யும் திட்டம் முன் வைக்கப்பட்டது. ஆனால், அது நிராகரிக்கப்பட்டது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்

இது தொடர்பாக கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், ”டெல்லி பல்கலைக்கழக சட்டப்படிப்பில் மனுதர்மத்தை சேர்க்கும் திட்டம் இல்லை. சர்ச்சைக்குரிய எதையும் பாடத்திட்டத்தில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை”என்றார்.

ஆனால், இமாச்சல பிரதேசத்தில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான பல்கலைக்கழகத்தில் இந்து படிப்பு என்ற பெயரில் மனுதர்மம் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்திலும் மனுதர்மம் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தையும் காவிமயமாக்குவதாகவும், வரலாற்றை திருத்தி எழுதுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.