மோடி மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது – இடைத்தேர்தல் வெற்றி குறித்து கார்கே

புதுடெல்லி,

நாடு முழுவதும் 13 தொகுதிகளில் நடைபெற்ற சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் இந்தியா கூட்டணி 10 இடங்களில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. மேலும் பா.ஜனதா 2 தொகுதிகளிலும், பீகாரின் ரூபாலி தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் சங்கர் சிங்கும் வெற்றிபெற்றுள்ளனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருவதாக இடைத்தேர்தல் வெற்றி குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், “சட்டசபை இடைத்தேர்தலின் சாதகமான முடிவுகளுக்காக பொதுமக்கள் அனைவரின் முன் தலைவணங்குகிறோம். காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

பாதகமான சூழ்நிலைகளில் கடுமையாக உழைத்த காங்கிரஸ் தொண்டர்கள் அனைவருக்கும் வணக்கம் செலுத்துகிறோம். பா.ஜனதாவின் ஆணவத்தையும், தவறான நிர்வாகத்தையும், எதிர்மறை அரசியலையும் பொதுமக்கள் தற்போது முற்றாக நிராகரித்துள்ளதையே இந்த வெற்றி காட்டுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி-அமித் ஷாவின் அரசியல் மீது மக்களுக்கு உள்ள நம்பகத்தன்மை குறைந்து வருவதற்கு இந்த வெற்றிகள் வலுவான சான்றாகும்” என்று அதில் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.