ஜெருசலேம்,
இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தும், நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாக சிறை பிடித்தும் சென்றது.
எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களையும் மீட்போம் என சூளுரைத்து உள்ளது. ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சபதம் எடுத்துள்ளார். இதற்காக தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருகிறது.
இந்த மோதலில் 38 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காசா பகுதியில் உயிரிழந்து உள்ளனர். 88 ஆயிரம் பேர் காயமடைந்து உள்ளனர் என்று காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
போரின் தொடர்ச்சியாக, காசாவில் 23 லட்சத்திற்கும் கூடுதலான மக்கள் வீடுகளை இழந்தும், பசியில் வாடியும் வருகின்றனர். இந்நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் இன்று காசா முனை பகுதியில் அதிரடி தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில், பொதுமக்களில் 71 பேர் பலியாகி உள்ளனர். 289 பேர் காயமடைந்து உள்ளனர்.
காசா முனையில் இஸ்ரேல் தாக்குதலில் 71 பேர் பலியான நிலையில், ஹமாஸ் அமைப்பு தலைமையை குறி வைத்தோம் என இஸ்ரேல் விளக்கம் அளித்துள்ளது.
இதுபற்றி இஸ்ரேல் அதிகாரி ஒருவர் கூறும்போது, காசா முனை பகுதியில் கான் யூனிஸ் என்ற இடத்தில் முகமது டீப் என்பவரை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இஸ்ரேலின் தெற்கு பகுதியில் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி நடத்தப்பட்ட கொடூர தாக்குதலுக்கு பின்புலத்தில் இருந்து செயல்பட்ட முக்கிய புள்ளி இவர் என பலராலும் நம்பப்படுகிறது.
பல ஆண்டுகளாக இஸ்ரேல் அரசால் அதிகம் தேடப்படும் நபர்களின் பட்டியலில் முதன்மையான நபராக டீப் உள்ளார். கடந்த காலங்களில் பல முறை நடந்த படுகொலை முயற்சியில் இருந்து இவர் தப்பியிருக்கிறார் என்றும் நம்பப்படுகிறது.
இதேபோன்று, ஹமாஸ் அமைப்பின் மற்றொரு முக்கிய அதிகாரியான ரபா சலமா என்பவரும் இந்த தாக்குதலில் குறி வைக்கப்பட்டு உள்ளார். இந்த இருவரும் தாக்குதலில் கொல்லப்பட்டனரா? அல்லது இல்லையா? என்ற விவரங்களை அவர் வெளியிடவில்லை.