கடலூர்: சிதம்பரத்தில் திருட்டு நகைகள் வாங்கியதாக 3 பேரை ஈரோடு போலீஸார் அழைத்து சென்றனர். இதனைக் கண்டித்து சிதம்பரம் நகை வியாபாரிகள் சங்கத்தினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள காசு கடை தெருவில் சுமார் 200-க்கும் மேற்பட்ட நகைக்கடைகள் உள்ளன. இங்கு நகை செய்யும் பட்டறைகள் அதிக அளவில் உள்ளன. இந்நிலையில், சனிக்கிழமை இரவு சுமார் 7 மணி அளவில் ஈரோடு போலீஸார் சிதம்பரம் காசு கடை தெரு பகுதிக்கு சென்று திருட்டு நகை வாங்கியதாக கூறி அப்பகுதியை சேர்ந்த மோகன்,
முருகன், பாபுராஜ் ஆகியோரின் வீட்டுக்கு சென்று 3 பேரையும் அழைத்து சென்றுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த சிதம்பரம் தங்கம் வெள்ளி நகை வியாபாரிகள் சங்கத்தினர் திடீரென போலீஸாரை கண்டித்து இரவு 8 மணி அளவில் மேல வீதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாங்கள் திருட்டு நகைகள் வாங்குவது கிடையாது. எந்தவித முன்னறிவிப்புமின்றி போலீஸார் அழைத்துச் சென்றதை வன்மையாக கண்டிப்பதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீஸாரை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். இதனால் சிதம்பரம் மேல வீதியில் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீஸார் தொடர்ந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.