7 மாநில இடைத்தேர்தல்களில் இண்டியா கூட்டணி அபாரம்: விக்கிரவாண்டியில் திமுக அமோக வெற்றி

புதுடெல்லி / விழுப்புரம்: நாடு முழுவதும் நடைபெற்ற 13 சட்டப்பேரவைத் தொகுதிகளின் இடைத்தேர்தல்களில் இண்டியா கூட்டணி கட்சிகள் அபார வெற்றி பெற்றுள்ளன. தமிழகத்தின் விக்கிரவாண்டியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றது.

நாடு முழுவதும் 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில், காங்கிரஸ் 4, திரிணமூல் காங்கிரஸ் 4, பாஜக 2, திமுக, ஆம் ஆத்மி, சுயேச்சை தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளன. இதன் மூலம் இண்டியா கூட்டணி கட்சிகள் 10 இடங்களிலும் பாஜக 2 இடங்களிலும் வென்று உள்ளன.

தமிழகத்தின் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பாமக வேட்பாளர் சி.அன்புமணி 56,296 வாக்குகள் பெற்று, தனது டெபாசிட்டை தக்க வைத்தார். 3 -வது இடம் வந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா உட்பட 27 பேர் டெபாசிட் இழந்தனர்.



விக்கிரவாண்டி தொகுதியின் திமுக எம்எல்ஏ புகழேந்தி உடல்நலக்குறைவால் கடந்த ஏப்ரல் மாதம் காலமானதைத் தொடர்ந்து, கடந்த 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

‘இந்த இடைத்தேர்தல் நியாயமாக நடைபெறாது; அதனால் நாங்கள் போட்டியிடவில்லை’ என்று அதிமுக ஒதுங்கிய சூழலில், திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா உள்ளிட்ட 29 பேர் போட்டியிட்டனர்.

திமுக அமைச்சர்கள் கே.என்.நேரு, உதயநிதி, பொன்முடி, செஞ்சி மஸ்தான், சி.வி.கணேசன் உள்ளிட்ட அமைச்சர்கள் 10 நாட்களுக்கும் மேலாக தொகுதியில் முகாமிட்டு, திமுக வேட்பாளருக்காக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கிராமங்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இண்டியா கூட்டணி கட்சிகளின் தலைவர்களான செல்வப்பெருந்தகை, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன் உள்ளிட்டோரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட பாமக வேட்பாளருக்கு ஆதரவாக கட்சி நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ஆகியோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட, கூட்டணிக் கட்சித் தலைவர்களான அண்ணாமலை, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோரும் ஆதரவு திரட்டினர். தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் வாக்கு சேகரித்தனர்.

இந்த தேர்தலில் 1,16,962 ஆண் வாக்காளர்கள், 1,20,040 பெண் வாக்காளர்கள், 29 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தமாக 2,37,031 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். 95,536 ஆண் வாக்காளர்கள், 99,444 பெண் வாக்காளர்கள், 15 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தமாக 1,95,495 வாக்காளர்கள் (82.48 சதவீதம்) வாக்களித்தனர்.

பிறகு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கியது.

முதலாவதாக அரசியல் கட்சியினர் முன்னிலையில் தபால் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. அப்போது, முதல் வாக்கு கையெழுத்து இல்லாததால் செல்லாத வாக்காக அறிவிக்கப்பட்டது. தபால் வாக்கு எண்ணிக்கை ஒரே சுற்றில் முடிவடைந்தது.

இதைத்தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. 14 மேசைகளில் 21 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. முதல் சுற்றில் இருந்தே திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை வகித்து வந்தார்.

21 சுற்றுகள் முடிவில் தபால் வாக்குகள் உட்பட திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1 லட்சத்து 24 ஆயிரத்து 53 வாக்குகளும், பாமக வேட்பாளர் சி அன்புமணி 56 ஆயிரத்து 296 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மருத்துவர் அபிநயா 10 ஆயிரத்து 602 வாக்குகளும் பெற்றிருந்தனர். நோட்டாவுக்கு 859 வாக்குகள் விழுந்திருந்தன. வாக்கு எண்ணிக்கை மாலை 4.15-க்கு முடிவடைந்து, திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் சி.அன்புமணியை விட கூடுதலாக 67 ஆயிரத்து 757 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

வெற்றி பெற்றதற்கான சான்றிதழை திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவிடம் மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் பழனி முன்னிலையில், தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திர சேகரன் வழங்கினார்.

இடைத்தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் திமுகவினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுகவினருக்கு இனிப்புகள் வழங்கினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.