குரூப்-1 தேர்வில் 1.60 லட்சம் பேர் பங்கேற்பு: நடப்பு நிகழ்வுகள் தொடர்பாக அதிக கேள்விகள்

சென்னை: தமிழகத்தல் துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட உயர் பதவிகளுக்காக நடத்தப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலைத் தேர்வை தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 60,340 பேர் எழுதினர். தேர்வில் நடப்பு நிகழ்வுகள், மத்திய-மாநில அரசு திட்டங்கள் தொடர்பாக அதிக கேள்விகள் இடம்பெற்றதாக தேர்வர்கள் தெரிவித்தனர்.

வருவாய் கோட்டாட்சியர் (துணை ஆட்சியர்), டிஎஸ்பி, வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவிஇயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள்அலுவலர் ஆகிய உயர் பதவிகளை நேரடியாக நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலைத் தேர்வு நடத்தப்படுகிறது.

இந்த தேர்வை எழுத 2 லட்சத்து 38,247 பேர் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் 37,891 மையங்களில் நேற்று நடந்த தேர்வில் 1 லட்சத்து 60,340 பேர் மட்டுமே பங்கேற்றனர். 77,907 பேர் தேர்வுக்கு வரவில்லை.



சென்னையில்124 மையங்களில் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வில் பங்கேற்றனர். பொது அறிவு பகுதியில் இருந்து 175 வினாக்களும், கணிதம் மற்றும் நுண்ணறிவு பகுதியில் 25 கேள்விகளும் இடம்பெற்றன. தேர்வில், நடப்பு நிகழ்வுகள், மத்திய- மாநில அரசு திட்டங்கள் தொடர்பான கேள்விகள் அதிக எண்ணிக்கையில் கேட்கப்பட்டதாக தேர்வெழுதியவர்கள் தெரிவித்தனர்.

மேலும் ஒருவரி வினாக்கள் மிகக்குறைவாகவே இடம்பெற்றன. பெரும்பாலான கேள்விகள் ஆராய்ந்து விடையளிக்கும் வகையில் கேட்கப்பட்டிருந்தன. அதனால் அதிக நேரம் எடுத்துக் கொண்டது. சிவில் சர்வீஸ் தேர்வு புத்தகங்களில் இருந்து சில கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. கணித வினாக்கள் எளிதாக இருந்தன என தேர்வர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர்.

மெயின் தேர்வு: முதல்நிலைத் தேர்வு மூலம் ஒரு காலியிடத்துக்கு 20 பேர் என்ற விகிதாச்சார அடிப்படையில் மெயின் தேர்வுக்கு 1800 பேர் அனுமதிக்கப்படுவர். இந்த தேர்வு விரிவாக விடை எழுதுவும் வகையில் அமைந்திருக்கும்.

இதில் பொது அறிவு தொடர்பான 3 தாள்களும், கட்டாய தமிழ்மொழி தகுதித்தாளும் இடம்பெற்றிருக்கும். தமிழ் மொழி தாளில் தேர்ச்சி பெற்றாலே போதும். பொது அறிவு தாள் மதிப்பெண் அடிப்படையில் தேர்வர்கள் நேர்முகத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். இறுதியாக மெயின் தேர்வு மதிப்பெண், நேர்முகத்தேர்வு மதிப்பெண், இடஒதுக்கீடு அடிப்படையில் பணிக்கு தேர்வுசெய்யப்படுவர்.

குரூப்-1 தேர்வு மூலம் நேரடியாக துணை ஆட்சியர் பணியில்சேருவோர் குறிப்பிட்ட ஆண்டுகளில் ஐஏஎஸ் அதிகாரியாகவும், அதேபோல் டிஎஸ்பி ஆக பணியில் சேர்வோர் ஐபிஎஸ் அதிகாரியாகவும் பதவி உயர்வு பெறலாம். அவர்களுக்கு தமிழ்நாடு கேடர் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் உள்ளிட்ட இதர பணி அதிகாரிகள் வருவாய் அல்லாத பிரிவின் கீழ் ஐஏஎஸ் அதிகாரியாக ஆகலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.