இந்த வார டாப் சினிமா தகவல்களை இங்கே பார்க்கலாம்.
கம்பேக் கொடுக்கும் தேனாண்டாள் பிலிம்ஸ்!
தயாரிப்பாளர் முரளி ராமசாமியின் தயாரிப்பு நிறுவனமான ‘தேனாண்டாள் பிலிம்ஸ்’ நீண்ட இடைவெளிக்குப் பிறகு படங்களைத் தயாரிக்கத் தொடங்கியிருக்கிறது. ‘மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்’ எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தை இப்போது தயாரிக்கவிருக்கிறது. இந்தத் தயாரிப்பு நிறுவனம் கடைசியாக விஜய் நடித்திருந்த ‘மெர்சல்’ திரைப்படத்தைத் தயாரித்திருந்தது. அதுதான் இந்த தயாரிப்பு நிறுவனத்தின் 100வது திரைப்படம். இந்தப் புதிய படத்தில் யூடியூப் தளத்தின் மூலம் பரிச்சயமான ‘ஜம்ப் கட்ஸ்’ ஹரி பாஸ்கர் கதாநாயகனாக நடிக்கிறார். மோனோ ஆக்டிங் வடிவில் யூட்யூப் நகைச்சுவை வீடியோக்களில் தூள் கிளப்பியவர் நாயகனாக அறிமுகமாகும் முதல் திரைப்படம் இதுதான்.
வீடியோ காலில் நடைபெற்ற நிச்சயதார்த்தம்!
நடிகர் நெப்போலியன் தனது குடும்பத்துடன் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவரின் மகனுக்குச் சமீபத்தில் திருநெல்வேலியைச் சேர்ந்த அக்ஷயா என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றிருந்தது. இந்த நிச்சயதார்த்தம் வீடியோ கால் மூலமாக நடைபெற்றிருக்கிறது. நெப்போலியனின் மகனான தனுஷுக்கு நான்கு வயது இருக்கும்போது தசைநார் தொய்வு ஏற்பட்டது. இவரின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த நிச்சயதார்த்தம் வீடியோ காலில் நடைபெற்றதாகக் கூறுகிறார்கள்.
உருவாகும் பார்ட் 2 திரைப்படங்கள்!
ஒரு திரைப்படத்தின் முதல் பாகம் அதிரடியான வெற்றியைப் பெற்றுவிட்டால் அதன் இயக்குநர்கள் அடுத்தடுத்த பாகங்களுக்குத் திட்டமிடுவது தமிழ் சினிமாவின் டிரெண்டாக இப்போது மாறிவிட்டது. அந்த வரிசையில் கோலிவுட்டில் பல சீக்குவல் திரைப்படங்கள் தற்போது தயாராகி வருகின்றன. இந்த வரிசையில் தற்போது சர்தார் 2, கைதி 2, கலகலப்பு 3, தனி ஒருவன் 2, சூது கவ்வும் 2, பீட்சா 4, சார்பட்டா பரம்பரை 2, இன்று நேற்று நாளை 2, தேசிங்கு ராஜா 2, துப்பறிவாளன் 2, டிமாண்டி காலனி 2, காளிதாஸ் 2, இவன் தந்திரன் 2 ஆகிய திரைப்படங்கள் குறித்தான அதிகாரபூர்வ அறிவிப்புகள் ஏற்கெனவே வெளியாகிவிட்டது. இதில் சர்தார் 2 திரைப்படத்திற்கான பூஜை நேற்று நடைபெற்றது. கைதி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு தொடங்கும் என்பதை சமீபத்திய நிகழ்வில் நடிகர் கார்த்தியே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கமல்ஹாசனுடன் முதல் மற்றும் கடைசி திரைப்படம்!
கமல்ஹாசன் நடித்திருக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. கமல்ஹாசன் வடிவேலு உட்படப் பல நகைச்சுவை நடிகர்களுடன் இணைந்திருக்கிறார். இத்திரைப்படத்தின் மூலமாக முதல் முறையாக நடிகர் விவேக்குடன் இணைந்திருக்கிறார். ஆனால், இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவதற்கு முன்பே விவேக் இறந்தது படக்குழுவினரைத் துக்கத்தில் ஆழ்த்தியது. கமல்ஹாசனுடன் விவேக் இணைந்து நடித்த முதல் மற்றும் கடைசி திரைப்படம் இதுதான்.
ஷங்கருடன் கைகோர்த்த இயக்குநர்கள்:
ஷங்கர் இயக்கியிருக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இத்திரைப்படத்திற்கு செகண்ட் யூனிட் இயக்குநர்களாக வேலை பார்ப்பதற்கு மூன்று இயக்குநர்களுடன் கைகோர்த்திருக்கிறார் ஷங்கர். இயக்குநர் வசந்த பாலன், இயக்குநர் சிம்பு தேவன், இயக்குநர் அறிவழகன் ஆகியோருடன் கூட்டணி அமைத்துப் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார். இயக்குநர் வசந்த பாலன் இயக்கத்தில் சமீபத்தில் ‘தலைமைச் செயலகம்’ என்ற வெப் சீரிஸ் வெளியாகியிருந்தது. சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகியிருக்கிற ‘போட்’ திரைப்படம் ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியாகவுள்ளது. மேலும், இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் உருவாகியிருக்கிற ‘சப்தம்’ திரைப்படமும் விரைவில் வெளியாகவுள்ளது. இவர்கள் அனைவருமே ஷங்கரின் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷ் படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ்!
தனுஷ் தன்னுடைய 50வது திரைப்படமான ‘ராயன்’ படத்தை அவரே இயக்கியிருக்கிறார். இத்திரைப்படம் இம்மாதம் 26-ம் தேதி வெளியாகவிருக்கிறது. இத்திரைப்படத்திற்குத் தணிக்கைக் குழு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதற்கு முன் தனுஷ் நடித்திருந்த ‘வடசென்னை’ திரைப்படத்திற்கும் ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தது.