`அசைவ உணவு இல்லையா?’ – இரு வீட்டாரிடையே ஏற்பட்ட மோதலில் 6 பேர் காயம்.. களேபரத்தில் முடிந்த கல்யாணம்!

உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வொன்றில், அசைவ உணவு வழங்கப்படாததால், மணமகன் மற்றும் மணமகள் தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில், ஆறு பேர் காயமடைந்துள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள டியோரியா மாவட்டத்தின் ஆனந்த் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர்கள், அபிஷேக் ஷர்மா மற்றும் சுஷ்மா. இவர்கள் இருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. மணமகனுக்கு வரதட்சணையாக 4.5 லட்சம் மதிப்பிலான கார் ஒன்றும் , 20,000 மதிப்புள்ள இரண்டு தங்க மோதிரங்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை மணமகள் வீட்டில் இருவருக்கும் திருமண சடங்குகள் தொடங்கியுள்ளன . மாலை மாற்றும் சடங்கு முடிந்தவுடன், மணமகன் அபிஷேக் ‘அசைவ உணவுகள் வழங்கப்படவில்லை’ எனக் கூறியுள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது.

அது உச்சத்தை அடையவே, இரு தரப்பினரும் ஒருவரையொருவர் மரக்கட்டைகள் மற்றும் கற்களால் தாக்கிக்கொண்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மணமகளின் தந்தை தினேஷ் ஷர்மா, மணமகன் அபிஷேக் ஷர்மா, சுரேந்திர ஷர்மா, ராம்பிரவேஷ் ஷர்மா ஆகியோர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதோடு வரதட்சணை கொடுமை செய்ததாகவும் புகார் அளித்துள்ளார். தினேஷ் ஷர்மா கூறுகையில், “அபிஷேக் ஷர்மா, சுரேந்திர ஷர்மா, ராம்பிரவேஷ் ஷர்மா ஆகியோர் என்னை ஆபாசமான வார்த்தைகளால் திட்டினர். அதை நான் மறுத்துப் பேசும்போது, மரக்கட்டையால் என்னைத் தாக்கினர். அதோடு என்னை அடித்தனர்” எனக் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.