Indian 2: "`கரியர் பீக்ல இருக்கறப்ப ஏன் விலகுறீங்க'ன்னு கேட்டாங்க!" – `காலண்டர் சாங்' சுவி பேட்டி

ராப் இசையில் பெண்களின் பங்கு இன்றைய தேதியில் அதிகரித்திருக்கிறது. பலரும் தங்களுடைய தனிப்பட்ட ஸ்டைலில் பல மேஜிக்குகளை நிகழ்த்துகிறார்கள்.

ராப் இசை தமிழ் சினிமாவுக்குப் பெரிதளவில் பரிச்சயமாகாத சமயத்திலேயே ராப் பாடல்களைப் பாடி தூள் கிளப்பினார் பின்னணி பாடகி சுவி. சரோஜா திரைப்படத்தில் வரும் ‘கோடான கோடி’ உட்படப் பல ஹிட் பாடல்களைப் பாடியிருக்கிறார். தற்போது சான்டியோகோவில் இசை சார்ந்து பல விஷயங்களைச் செய்து வருகிறார். திரையரங்குகளில் வெளியாகியிருக்கிற ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் வருகிற ‘காலண்டர் சாங்’ பாடலைப் பாடியது இவர்தான். அவரைத் தொடர்பு கொண்டு பேசினோம்.

‘இந்தியன் 2’ காலண்டர் சாங் பாடல் உங்ககிட்ட வந்தது எப்படி?

“2019-ல அனிரூத் இந்தப் பாடலுக்காக எனக்கு கால் பண்ணாரு. அப்போ இந்தப் பாட்டுக்கான வேலைகளெல்லாம் என்னுடைய ஸ்டுடியோல நடந்துச்சு. அதுக்குப் பிறகு இப்போ மூணு மாசத்துக்கு முன்னாடிதான் எனக்கு கால் பண்ணி இந்த ‘காலண்டர் சாங்’ பாடல் வெளியாகப் போகுதுனு சொன்னாங்க. நான் அனிரூத்கூடவும் ஷங்கர் சார்கூடவும் இப்போதான் முதல் முறையாக வேலை பார்க்குறேன். ‘இந்தியன் 1’ மிகப்பெரிய ஒரு பிரமாண்ட படைப்பு. அந்தப் படத்தோட அடுத்த பாகத்துல வேலை பார்த்தது ரொம்பவே பெருமையான விஷயம்.”

Calendar Song

சுவிங்கிற பெயர் உங்களுக்கு எப்படிக் கிடைச்சது?

“நான் திட்டமிட்டு சுவினு பெயர் வைக்கல. என்னுடைய பெயர் ஸ்வேதா. நான் பின்னணி பாடகராக அறிமுகமான சமயத்துல ஸ்வேதானு நிறைய பாடகர்கள் இருந்தாங்க. அப்போ நான் ‘குருவி’ படத்துல ஒரு ராப் பாடல் பாடியிருந்தேன். அந்தப் பாடலுக்கு நான் வேற ஒரு பெயர் கொடுத்தேன். ஆனா, அதுல சுவின்னு போட்டுட்டாங்க. அப்போ நான் அந்தப் படத்தோட இயக்குநர் தரணி சார்கிட்ட நான் ‘என்ன பண்றது’ன்னு கேட்டேன். அவர், ‘இப்படிதான் நடக்கணும்னு இருந்திருக்கு’னு சொன்னாரு. அப்புறம் அந்தப் பெயர்தான் இப்போ பலருக்கும் பரிச்சயமாகியிருக்கு. சென்னையிலும் அமெரிக்காவிலும் இந்தப் பெயர்தான் இப்போ எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கு.”

இப்போ வரைக்கும் ‘கோடான கோடி’ பாட்டைப் பாடினது நீங்க தானானு ஆச்சரியமா பலர் பார்க்குறாங்களே!

“ஆமா, ‘கோடான கோடி’ மாதிரியான என்னுடைய பாடல்கள் வந்த சமயத்துல நான் பெருசா ஆக்டிவ்வாக இல்ல. ஆனா, அதை பத்தி நான் கவலைப்பட மாட்டேன். அந்தப் பாடல்தான் பின்னணி பாடகராக என்னுடைய கரியரைத் தூக்கிவிட்டுச்சு. ஆனா அதுக்கு முன்னாடியே சுயாதீன இசைக் கலைஞராக நிறைய பாடல்கள் பண்ணியிருக்கேன். அப்போ ‘கோடான கோடி’ பாடல் மட்டுமில்ல ‘மாசிலாமணி’ படத்துல வர்ற ‘ஓடி ஓடி விளையாடு’ பாடலும் நல்ல ஹிட்டாச்சு.”

Singer SUVI

இப்படி ஹிட் பாடல்கள் அமைஞ்சதும் பலரும் சினிமாவுல தொடர்ந்து இயங்கிட்டே இருந்திருப்பாங்க! ஆனா, நீங்க சில பாடல்கள்தான் பாடியிருக்கீங்க, ஏன்?

“சொல்லப்போனா, 2007ல இருந்து 2010 வரைக்கும் நான் ரொம்பவே பிஸியாக இருந்தேன். ஒரு நாளைக்கு எனக்கு மூணு ரெக்கார்டிங்லாம் இருக்கும். ஆனா, அப்போ தேக்கநிலை ஏற்பட்டுருச்சு. அந்த நேரத்துல சினிமாவுல பார்ட்டி சாங்ஸ்னு வரும்போது பெண் பாடகர்களுக்கு ‘ஐட்டம் சாங்ஸ்’ பாடுறதுக்குதான் வாய்ப்புகள் கிடைச்சது. எனக்கும் அப்படித்தான் அமைஞ்சது.

ஆனா, நான் பாடல்களும் எழுதுவேன். நானே என்னுடைய பாடல்களை கம்போஸ் பண்ணுவேன். ஏனோ அந்த வாய்ப்பு எனக்கு அமையல. இதுக்கெல்லாம் பிறகு 2011-ல வெளிநாடுகளுக்குப் போய் மியூசிக் பத்தி ஆழமாகப் படிக்கிறதுக்கு ஆசைப்பட்டேன். அப்போ எல்லோரும், ‘ரொம்பவே பீக் காலகட்டத்துல இருக்கீங்க! ஏன் விலகுறீங்க?’னு கேட்டாங்க. ஆனா, எனக்கு பணம் சந்தோஷத்தைக் கொடுக்கல. சரியாக வாழ்றதும் சரியான விஷயங்களைத் தொடர்ந்து செய்யுறதும்தான் இங்க ரொம்ப முக்கியம். இப்போ நான் ஆசைப்பட்ட விஷயங்களைதான் பண்ணிட்டு இருக்கேன். நான் இங்க இப்போ பல பாடல்கள் பண்ணீட்டு இருக்கேன். ஆனாலும் நான் தமிழ் சினிமாவை மிஸ் பண்றேன்தான்.”

நீங்க ராப் இசை பாடத் தொடங்கின சமயத்துல பெண் ராப் பாடகர்கள் ரொம்பவே குறைவாகதான் இருந்தாங்க. அப்போ உங்க மனநிலை எப்படி இருந்துச்சு?

“ஆமா, சொல்லப்போனா இப்பவும் அதான் நிலைமை. போன வருஷம்கூட எனக்கு சில இடங்கள்ல இருந்து கால் வந்தது. பெண் ராப் பாடகியாக தமிழில் நீங்கதான் இருக்கீங்க. அதை பிரதிநிதிப்படுத்துறதுக்கு நீங்க வரணும்னு கேட்டாங்க. அப்போதான் தமிழ்ல பெண் ராப் பாடகர்கள் ரொம்பவே குறைவாக இருக்காங்கனு தெரிஞ்சது.”

Singer SUVI

யுவன் சார் இசையிலதான் அதிக ஹிட் பாடல்கள் பாடியிருக்கீங்க!

“ஆமா, ‘கோடான கோடி’ பாடல்ல இருந்து நிறைய பாடல்கள் யுவன் சார் இசையிலதான் பாடினேன். இப்போ கடைசியாக அவர் இசையில ‘தரமணி’ படத்துல ஒரு பாடல் பாடினேன். அந்தப் பாடலுக்கான வேலைகள் நான் இங்க வெளிநாட்டுல இருக்கும்போதுதான் நடந்துச்சு. அந்தப் பாட்டுக்கான சூழலை என்கிட்ட விளக்கினாங்க. சூழல் சொன்னதும் இங்க இருந்து அந்தப் பாட்டுல நான் பாடுற வரிகளை நான் பாடினேன். அதுதான் நான் யுவன் சார் இசையில பாடின கடைசி பாடல்.”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.