India vs Sri Lanka full schedule: இந்த மாத இறுதியில் இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. தற்போது ஜிம்பாப்வே தொடருக்கும் இளம் வீரர்கள் சென்றுள்ள நிலையில், இலங்கை சுற்றுப்பயணத்திற்கு முக்கிய வீரர்களை அனுப்ப பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இருப்பினும், டி20 உலக கோப்பை வென்ற அணியில் இருந்த விராட் கோலி, ரோஹித் சர்மா, பும்ரா போன்றவர்களுக்கு ஓய்வு வழங்கப்பட உள்ளது. வரும் ஜூலை 26ம் தேதி போட்டிகள் நடைபெற இருந்த நிலையில், தற்போது அதில் சில மாற்றங்களை செய்துள்ளது பிசிசிஐ. இதற்கான அறிவிப்பை நேற்று சனிக்கிழமை பிசிசிஐ அறிவித்தது. அதன்படி, ஜூலை 26ம் தேதி துவங்க இருந்த முதலாவது டி20 போட்டி ஒருநாள் தாமதமாக தற்போது ஜூலை 27ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இலங்கை சுற்றுப்பயணத்தில் மொத்தம் மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது. அனைத்து டி20 போட்டிகளும் பல்லேகலிலும், ஒருநாள் போட்டிகள் முழுவதும் கொழும்பிலும் நடைபெறவுள்ளது. புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவரது தலைமையில் இந்திய அணி விளையாடும் முதல் தொடர் இது ஆகும். ஜூலை 27, 28 மற்றும் 30 ஆகிய தேதிகளில் டி20 போட்டிகளும், ஆகஸ்ட் 2, 4, 7 ஆகிய தேதிகளில் ஒருநாள் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை பிசிசிஐ இன்னும் அறிவிக்கவில்லை. தற்போது வெளியான தகவலின்படி, ஹர்திக் பாண்டியா டி20 அணிக்கு கேப்டனாகவும், கேஎல் ராகுல் ஒருநாள் கேப்டனாகவும் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
UPDATE
A look at the revised schedule for #TeamIndia’s upcoming tour of Sri Lanka #SLvIND pic.twitter.com/HLoTTorOV7
— BCCI (@BCCI) July 13, 2024
இந்திய அணியை போன்ற இலங்கை அணியிலும் பயிற்சியாளர் மற்றும் கேப்டன் மாற்றப்பட்டுள்ளனர். கிறிஸ் சில்வர்வுட்டுக்குப் பதிலாக சனத் ஜெயசூர்யா புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் டி20 உலக கோப்பையில் இலங்கை அணியின் கேப்டனாக இருந்த வனிந்து ஹசரங்க தற்போது ராஜினாமா செய்துள்ளார். அவருக்கு பதிலாக புதிய கேப்டன் இந்த தொடரில் தலைமை தாங்க உள்ளார். தற்போது வரை இலங்கை அணி புதிய கேப்டனை அறிவிக்கவில்லை.
இந்தியாவின் இலங்கை சுற்றுப்பயணத்திற்கான புதிய அட்டவணை
ஜூலை 27, 2024, முதலாவது டி20, பல்லேகலே
ஜூலை 28, 2024, 2வது டி20, பல்லேகலே
ஜூலை 30, 2024, 3வது டி20, பல்லேகலே
ஆகஸ்ட் 2, 2024, 1வது ஒருநாள் போட்டி, 14:30, கொழும்பு
ஆகஸ்ட் 4, 2024, 2வது ஒருநாள் போட்டி, 14:30, கொழும்பு
ஆகஸ்ட் 7, 2024, 3வது ஒருநாள் போட்டி, 14:30, கொழும்பு