பனாஜி: கோவா மாநில பாஜக செயற்குழு கூட்டம் பனாஜி அருகில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜக மூத்த தலைவரும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சருமான நிதின் கட்கரி பேசியதாவது:
காங்கிரஸ் கட்சி தவறுகள் செய்ததால்தான் மக்கள் பாஜகவை தேர்வு செய்துள்ளனர். காங்கிரஸ் செய்த தவறுகளை நாமும் செய்தால் பிறகு அக்கட்சி ஆட்சியில் இருந்து வெளியேறியதற்கும் நாம் அதிகாரத்துக்கு வந்ததற்கும் எந்த அர்த்தமும் இல்லாமல் போய்விடும்.
பாஜக ஒரு வித்தியாசமான கட்சி என்று அத்வானி கூறுவார். மற்ற கட்சிகளிலிருந்து நாம் எவ்வாறு மாறுபட்டுள்ளோம் என்பதை கட்சியினர் புரிந்துகொள்ள வேண்டும். சமூக,பொருளாதார சீர்திருத்தங்களை கொண்டு வருவதற்கான ஒரு கருவிதான் அரசியல் என்பதை கட்சித் தொண்டர்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஊழலை நாட்டிலிருந்து ஒழிக்க வேண்டும், அதற்கான திட்டம் வகுக்கப்பட வேண்டும்.
மகாராஷ்டிராவில், சாதி அடிப்படையில் அரசியல் செய்யும் போக்கு உள்ளது. என்றாலும் இந்தப் போக்கை பின்பற்ற வேண்டாம் என்று நான் முடிவு செய்துள்ளேன். சாதி அரசியலில் ஈடுபடமாட்டேன் என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளேன். சாதி பற்றி பேசுவோருக்கு பலமான அடி கிடைப்பது நிச்சயம்.
கோவாவில் 2027 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள தொண்டர்கள் ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று கட்சி அமைப்பை வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு அமைச்சர் நிதின் கட்கரி கேட்டுக்கொண்டார்.
இக்கூட்டத்தில் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், மாநில பாஜக தலைவர் சதானந்த் ஷெத் தனவாடே மற்றும் கட்சி எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.