பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால், ஜூலை 5-ம் தேதி இரவு பெரம்பூரில் அவரது வீட்டருகே வெட்டிக் கொலைசெய்யப்பட்டார். அதையடுத்து, இந்தக் கொலையில் பொன்னை பாலு (ஆற்காடு சுரேஷ் தம்பி), திருமலை, மணிவண்ணன், திருவேங்கடம், ராமு, சந்தோஷ், அருள், செல்வராஜ் ஆகிய 8 பேர் குற்றவாளிகள் என கைதுசெய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
குறிப்பாக, ஆற்காடு சுரேஷ் கொல்லப்பட்ட சம்பவத்துக்குப் பழிவாங்கும் விதமாக அவரின் தம்பி பொன்னை பாலு, ஆம்ஸ்ட்ராங்கைத் திட்டம் போட்டுக் கொன்றதாகவும் கூறப்பட்டது. இன்னொருபக்கம், ஆருத்ரா நிறுவனத்தின் பெயரும் இதில் அடிபட்டது.
இருப்பினும், கைதுசெய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல என்றும், உண்மையான குற்றவாளிகளைக் கைதுசெய்யவேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன. பின்னர், இந்தக் கொலையில் தொடர்புடையதாக மேலும் மூன்று பேரைக் கைதுசெய்த போலீஸார் மொத்தமாக 11 பேரை காவலில் எடுத்து விசாரித்துவந்தனர்.
இதில், திருவேங்கடம் என்பவரை போலீஸார் இன்று என்கவுன்ட்டர் செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில், அதிகாலை விசாரணைக்காக வேறு ஒரு இடத்துக்கு கொண்டுசெல்லப்பட்ட போது, போலீஸாரைத் தாக்கிவிட்டு அவர் தப்பித்ததாகவும், பிடிக்க முயன்றபோது அவரின் தாக்குதலிலிருந்து தப்பிக்க அவரை என்கவுன்ட்டர் செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.