உ.பி.யில் சனிக்கிழமைதோறும் இளைஞரை கடிக்கும் பாம்பு: மாவட்ட ஆட்சியரிடம் வந்த புகார் மீது விசாரணை குழு அமைப்பு

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் பதேபூரைச் சேர்ந்த விகாஸ் துபே (24). இவரை கடந்த 40 நாட்களில் 7 முறை பாம்பு கடித்துள்ளது. அதுவும் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பாம்பு கடித்ததாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு முறையும் பாம்பு கடித்த போதெல்லாம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளார்.

தொடர்ந்து சிகிச்சைக்காக நிறைய செலவு செய்ததால் விகாஸ் துபேவுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆட்சியர் அலுவலகத்தை அணுகிய அவர், சிகிச்சைக்கு நிதியுதவி கேட்டு கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து, இதுகுறித்து விசாரணை நடத்த 3 மருத்துவர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தலைமை மருத்துவ அதிகாரி ராஜீவ் நயன் கிரி கூறும்போது, “விகாஸ் துபே நிதியுதவி கேட்டு மாவட்ட ஆட்சியரை அணுகி உள்ளார். அரசு மருத்துவமனைக்கு சென்றால்இலவச சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என நான் ஆலோசனை வழங்கினேன்.



மேலும், அவரை பாம்புதான் கடித்ததா என்பதை ஆராய வேண்டிஉள்ளது. அத்துடன் பாம்பு கடித்ததும் ஒரே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஓரிருநாளில் குணமடைந்துள்ளார். எனவே, அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவரின் திறமை குறித்தும் ஆராய வேண்டி உள்ளது’’ என்றார்.

விகாஸை கடித்தது ஒரே பாம்பா அல்லது வெவ்வேறு பாம்பா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே, விகாஸ் ‘பாம்பு குத்தம்’ செய்து விட்டதால் அவரை பாம்பு கொல்லாமல் விடாது எனவும் அப்பகுதி மக்கள் அச்சுறுத்தத் தொடங்கிவிட்டனர்.

இதுபோன்ற மூட நம்பிக்கைகள் புதிதல்ல. கடந்த 1995-ல் அலிகரின் பிசோவோ கிராமத்தில் ஒரு விவசாயி டிராக்டர் ஓட்டிச் சென்றபோது, 2 பாம்புகள் மீது ஏற்றி கொன்று விட்டார். இதனால் பாம்புகள் படையெடுத்து வந்து ஊரையே பழிவாங்கப் போகிறது என பீதி கிளம்பியது.

இதையடுத்து, அப்பகுதியில் விளைந்த பயிர்களின் இலைகளில் பாம்பு தோல் போன்ற கோடுகள் தோன்றின. இறந்த பாம்புகளின் ஆவிதான் இலைகளில் கோடு போடுகின்றன என்றும் நாக பூஜை செய்து பரிகாரம் தேட வேண்டும் என்றும் தெரிவித்தனர். இதுபோல பூஜை செய்தனர். இதுகுறித்து ஆய்வு செய்த அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக தாவரவியல் துறை, இலைகள் மீது பரவியது ஒரு வகை வைரஸ் என கூறியபின் பீதி அடங்கியது.

அதேபோல் ஹாத்ரஸ் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு பாம்புடன் காதல் ஏற்பட்டதாக ஒரு புரளி கிளம்பியது. அதனால் அந்தப் பாம்பு அடிக்கடி வந்து அந்தப்பெண்ணை அன்பாக கொத்திவிட்டு செல்வதாகவும், அதேநேரம் விஷம்கக்குவதில்லை எனவும் கூறினர். ஆனால் அது விஷமற்ற பாம்பு என்றும், அந்தப் பெண் பிரபலமாவதற்காக இப்படி செய்தார் என்றும் தெரியவந்தது.

இதுகுறித்து இந்து தமிழ் நாளேட்டிடம் வைல்டுலைப் எஸ்ஓஎஸ் இணை நிறுவனர் கார்த்திக் சத்யநாராயணன் கூறும்போது, “பாம்புகளை வைத்து உ.பியின் மேற்கு பகுதியில் ஏராளமான கட்டுக்கதைகள் உண்டு. எனவே, தற்போது தொடங்கியுள்ள சிவனுக்கான ஸ்ரவண மாதத்தின் ஒவ்வொரு திங்கள்கிழமையும் பாம்புகளின் புனித நாள் என ஏமாற்றுவது வழக்கமாகிவிட்டது’’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.