கரூர்: கோயில் கும்பாபிஷேக பதாகை கிழிக்கப்பட்டதன் காரணமாக கரூர் அருகே இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பொய்யாமணி அம்பேத்கர் நகர் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் கடந்த 12ம் தேதி நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பொது இடத்தில் பதாகை வைத்துள்ளனர். நேற்று பதாகை கிழிக்கப்பட்டிருந்தது. மற்றொரு பிரிவினர் தான் இதனை செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது.
இது தொடர்பாக காவல் துறை, ஊர் முக்கியஸ்தர்கள், நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி இனிமேல் பொது இடங்களில் பதாகைகள் வைக்கக்கூடாது. பிரச்சனை ஏற்படாத வகையில் நடந்துக் கொள்ளவேண்டும் என அறிவுறுத்தப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்நிலையில் இன்று (ஜூலை 14ம் தேதி) பதாகை வைக்கப்பட்டிருந்த இடத்தருகே இரு பிரிவினர் சந்திக்கொண்டப்போது வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பு நடந்துள்ளது. இதையடுத்து இரு பிரிவினரும் கட்டைகள் மற்றும் கற்களால் தாக்கிக் கொண்டனர். குறைந்தளவே போலீஸாரே பாதுகாப்பு பணியில் இருந்ததால் மோதலை தடுக்க முடியவில்லை.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த குளித்தலை போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். பதாகையை சேதப்படுத்தி, தாக்குதலில் ஈடுபட்ட பிரிவினரை கைது செய்ய வலியுறுத்தி ஒரு பிரிவினர் அப்பகுதியில் சாலை மறியல் செய்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் போராட்டத்தில் ஈடுபட்டடவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மறியல் கைவிடப்பட்டது. மீண்டும் மோதல் ஏற்படுவதை தடுக்கும் வகையில் பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டனர். இதனிடையே, இளைஞர்கள் கம்புகளை எடுத்து தாக்கிக் கொள்ளும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.