துப்பாக்கி சூடு தாக்குதலின்போது சிறு அசைவால் உயிர் தப்பிய டிரம்ப் – பரபரப்பு வீடியோ

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும் களமிறங்கியுள்ளனர்.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இரு வேட்பாளர்களும் தீவிர பிரசாரம் மற்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், பென்சில்வேனியா மாகாணம் பட்லர் நகரில் இன்று நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் பங்கேற்றார்.

பொதுக்கூட்டத்தில் டொனால்டு டிரம்ப் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென அவர் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் டிரம்பின் காதில் ரத்த காயம் ஏற்பட்டது. அதேவேளை, இந்த தாக்குதலில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற நபர் உயிரிழந்தார். மேலும் சிலர் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து, சுதாரித்துக்கொண்ட பாதுகாப்புப்படையினர் டிரம்பை சுற்றி அரணாக நின்று பாதுகாத்தனர். மேலும், துப்பாக்கி சூடு நடத்திய நபரை பாதுகாப்பு பணியில் இருந்த உளவுப்படை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்திய நபர் 20 வயதான தாமஸ் மேத்யூ என்பது தெரியவந்துள்ளது. அதேவேளை, துப்பாக்கி சூட்டில் காயமடைந்த டிரம்ப் சிகிச்சைக்கு பின் தற்போது நலமாக உள்ளார்.

இந்நிலையில், துப்பாக்கி சூடு தாக்குதலின்போது சிறு அசைவால் டிரம்ப் உயிர் தப்பியது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. துப்பாக்கி சூடு நடப்பதற்கு ஒருசில விநாடிகளுக்கு முன் டிரம்ப் தனது தலையை லேசாக முன்னோக்கி அசைத்துள்ளார். அந்த சிறு அசைவால் டிரம்பின் தலையை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் அவரது காதை தாக்கியுள்ளது.

சிறு உடல் அசைவால் தலையை நோக்கி வந்த துப்பாக்கி தோட்டா டிரம்பின் காதை உரசி சென்றுள்ளது. இதில், டிரம்பின் காதில் இருந்து ரத்தம் வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.