9 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி அபார வெற்றி

கோவை,

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் மழையால் 7 ஓவராக குறைக்கப்பட்ட ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, திண்டுக்கல் டிராகன்சை துவம்சம் செய்து 2-வது வெற்றியை பெற்றது.

8-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கோவையில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில் நேற்றிரவு நடந்த 13-வது லீக்கில் முன்னாள் சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, திண்டுக்கல் டிராகன்சுடன் மோதியது. மழையால் இந்த ஆட்டம் 3 மணி நேரம் பாதிப்புக்குள்ளானதால் 7 ஓவர் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது. ‘டாஸ்’ ஜெயித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் ேகப்டன் பாபா அபராஜித் பந்து வீசுவதாக அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி, தொடக்க ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஷிவம் சிங் (0), பூபதிகுமார் (0) இருவரையும் வேகப்பந்து வீச்சாளர் அபிஷேக் தன்வர் காலி செய்ததுடன் அந்த ஓவரை மெய்டனாக்கி கலக்கினார். பாபா இந்திரஜித்தும் (0) வந்தவேகத்தில் நடையை கட்டினார்.

இந்த அதிர்ச்சிக்கு இடையே மற்றொரு தொடக்க வீரரும், கேப்டனுமான ஆர்.அஸ்வின் அதிரடி காட்டி தங்கள் அணியை தூக்கி நிறுத்தினார். அவருக்கு விமல்குமார் (12 ரன்) சற்று ஒத்துழைப்பு தந்தார். நிர்ணயிக்கப்பட்ட 7 ஓவர்களில் திண்டுக்கல் 6 விக்கெட்டுக்கு 64 ரன்கள் எடுத்தது. அஸ்வின் 45 ரன்களுடன் (20 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார். கில்லீஸ் தரப்பில் அபிஷேக் தன்வர், ஜி.ெபரியசாமி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அடுத்து களம் இறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சந்தோஷ்குமாரின் (0) விக்கெட்டை முதல் பந்திலேயே இழந்தாலும் விக்கெட் கீப்பர் ஜெகதீசனும், கேப்டன் பாபர் அபராஜித்தும் வெற்றிப்பாதைக்கு அடித்தளமிட்டனர். வருண் சக்ரவர்த்தி, அஸ்வின் சுழலில் சிக்சர்களை நொறுக்கி ரசிகர்களை குதூகலப்படுத்தினர்.

கில்லீஸ் அணி 4.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 65 ரன்கள் ேசர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஜெகதீசன் 32 ரன்னுடனும் (14 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்), பாபா அபராஜித் 31 ரன்னுடனும் ( 14 பந்து, 3 சிக்சர்) களத்தில் இருந்தனர். 4-வது லீக்கில் ஆடிய கில்லீசுக்கு இது 2-வது வெற்றியாகும். திண்டுக்கல்லுக்கு விழுந்த 2-வது அடியாகும்.

இன்றைய ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ்- மதுரை பாந்தர்ஸ் (இரவு 7 15 மணி) அணிகள் மோதுகின்றன.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.