Doctor Vikatan: 20 வயதுக்கு முன்பான இளநரையை reverse செய்ய முடியுமா… வீட்டு சிகிச்சை உதவுமா?

Doctor Vikatan: என் மகனுக்கு 15 வயதாகிறது. இப்போதே நான்கைந்து நரை முடிகள் தெரிகின்றன. 20 வயதுக்குள் வரும் நரையை மீண்டும் கறுப்பாக மாற்றிவிடலாம் என்கிறார்கள் சிலர். இப்படி reverse செய்வது சாத்தியமா…? இந்தப் பிரச்னைக்கு வீட்டு சிகிச்சைகள் ஏதேனும் சொல்ல முடியுமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த அரோமாதெரபிஸ்ட் கீதா அஷோக்

கீதா அஷோக்

ஐந்து வயதுக் குழந்தைக்கு நரை வந்தாலும், அதை ரிவர்ஸ் (reverse) செய்ய முடியாது. ஆனால், அது மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அதற்கு முன் நரைக்கான காரணங்களைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

பெற்றோரில் இருவரில் ஒருவருக்கு இளவயதிலேயே நரை வந்திருந்தால், அவர்களின் பிள்ளைகளுக்கும் மரபு வழியே அது தொடரக்கூடும். அடுத்து கூந்தலுக்குப் போதுமான ஊட்டம் கிடைக்காத பட்சத்தில் சீக்கிரமே முடி நரைக்கும். அதாவது முடியின் கருமை நிறத்துக்கு இரும்புச்சத்தும் புரதச்சத்தும் சம அளவு கிடைக்க வேண்டும். 

இளவயதிலேயே நரை பாதிப்பு உள்ளவர்கள், ரத்தப் பரிசோதனை செய்து, இரும்புச்சத்து மற்றும் புரதச்சத்து அளவுகளைச் சரி பார்க்கலாம். இவை இரண்டும் சராசரியைவிட குறைவாக இருக்கும்பட்சத்தில், உடலுக்குத் தேவையான அமினோ அமிலம் போதுமான அளவு கிடைக்காது. அமினோ அமிலம் கிடைக்கவில்லை என்றால் முடிக்குத் தேவையான மெலனின் கிடைக்காது. மெலனின்தான் கூந்தலுக்கு கருமை நிறத்தைத் தரக்கூடியது. அது குறையும்போது கறுப்பாக உள்ள முடியானது பிரவுன் நிறத்துக்கு மாறும். பிறகு செம்பட்டையாக மாறும். பிறகு நரைக்கத் தொடங்கும்.

இரும்புச்சத்தும் புரதச்சத்தும் நிறைந்த உணவுகள்

நரைத்து வெள்ளையாக மாறிய முடியை மறுபடி கறுப்பாக ரிவர்ஸ் செய்ய வாய்ப்பே இல்லை. எனவே, முடி செம்பட்டையாகத் தொடங்கும்போதே அலெர்ட் ஆகி, கவனம் செலுத்த ஆரம்பியுங்கள். குழந்தைகளிடம் இந்தப் பிரச்னையைப் பார்க்கும்போது உடனடியாக அதற்கான காரணம் அறிந்தால், மேற்கொண்டு கூந்தல் செம்பட்டையாவதையும், அடுத்து நரைப்பதையும் தடுக்க முடியும். உணவில் இரும்புச்சத்து, துத்தநாகச் சத்து, புரச்சத்து என எல்லாமே இருக்க வேண்டும். இவையெல்லாம் காஸ்ட்லியான உணவுகளில்தான் கிடைக்கும் என தேடி ஓட வேண்டாம். நம்முடைய அன்றாட உணவுப்பழக்கத்திலேயே கிடைக்கக்கூடியவைதான். குறிப்பாக, காலை உணவைத் தவிர்க்கவே கூடாது. 

தலையில் பொடுகு அல்லது சொரியாசிஸ் போன்ற பிரச்னைகள் இருந்தாலும் கூந்தல் நரைக்கும். பொடுகோ, தொற்றோ சேரும்போது அது கூந்தலின் கருமைக்குக் காரணமான மெலனோசைட்ஸ் என்கிற நிறமி உற்பத்தியை பாதிக்கும். கூந்தல் சிகிச்சை நிபுணரிடம் ஆலோசனை செய்தால், மண்டைப்பகுதியை ஸ்கேன் செய்து பொடுகு, சொரியாசிஸ் உள்ளிட்ட தொற்று இருக்கிறதா என்று பார்த்துச் சொல்வார். அதைச் சரிசெய்தாலே, இளநரையைத் தடுக்க முடியும். ஃபேஷன் என்ற பெயரில் கூந்தலை அடிக்கடி அயர்ன் செய்வது, ஸ்ட்ரெயிட்டனிங் செய்வது, கலரிங் செய்வது போன்ற சிகிச்சைகளும் இளநரையை ஏற்படுத்தலாம். ஃபேஷன் கலர்கள் செய்துகொள்ளும்போது, சில கலர்களுக்கு கூந்தலின் இயற்கையான கருமை நிறத்தை நீக்கிவிட்டுதான் விருப்பமான வேறு கலரை அப்ளை செய்ய முடியும். அதனாலும் கூந்தலின் கருமை மாறி, நரைக்கத் தொடங்கும்.  எனவே, இதுபோன்ற சிகிச்சைகளைத் தவிர்க்க வேண்டும். 

தேங்காய்ப்பால்

எந்தச் சிசிக்சையிலும் நரை முடியை ரிவர்ஸ் செய்ய முடியாது. எனவே, நரை மேலும் அதிகரிக்காமலிருக்க வீட்டு சிகிச்சை ஒன்று சொல்கிறேன்.

கடுகெண்ணெயில் உள்ள சல்ஃபர் சத்து, கூந்தல் உடையாமல் காக்கும். கடுகெண்ணெயின் வாடை பிடிக்காதவர்கள், அத்துடன் சம அளவு விளக்கெண்ணெய் கலந்து எடுத்துக்கொள்ளவும். இதை முதல் நாள் இரவு தலையில் தடவி, ஒரு மணி நேரம் ஊறி, ஷாம்பூ குளியல் எடுக்கவும்.  மறுநாள், கால் மூடி தேங்காயைத் துருவி, தண்ணீர் விடாமல் அரைத்து 2 டேபிள்ஸ்பூன் அளவுக்கு கெட்டியான பால் எடுத்துக்கொள்ளவும். அதில் ஈவ்னிங் ப்ரிம்ரோஸ் ஆயில் (Evening Primrose Oil) கேப்ஸ்யூலில் (எல்லா மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்) உள்ள எண்ணெயை விட்டு, காட்டன் உருண்டையை முக்கி, மண்டைப்பகுதியில் படும்படி தலை முழுவதும் தடவி, 2-3 மணி நேரம் ஊறவும். முடிந்தால் ஷவர் கேப் போட்டுக்கொள்ளலாம். பிறகு ஷாம்பூ குளியல் எடுக்கவும். வாரம் ஒருமுறை இப்படிச் செய்து வந்தால், நரை தடுக்கப்படும். வந்த நரையை மாற்ற முடியாது என்றாலும், மேற்கொண்டு நரைப்பதைத் தவிர்க்கலாம்.  கூடவே உணவுப்பழக்கத்திலும் கவனம் செலுத்துங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.