நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் புலியின் நகங்கள் மற்றும் பற்களை விற்கும் முயற்சியில் இருவர் ஈடுபட்டு வருவதாக நீலகிரி கோட்ட வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். மஞ்சூரில் இருந்து சில கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ள தும்பநேரிக்கொம்பை என்ற பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த இருவர் மீது வனத்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.
அந்த கிராமத்தைச் லட்சுமணன், சந்திரன் ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்தியுள்ளனர். ஊட்டி அருகில் உள்ள எமரால்டு வனப்பகுதிக்கு தேன் சேகரிக்கச் சென்றபோது புலி ஒன்று இறந்து கிடந்தைப் பார்த்ததாகவும், அழுகிய நிலையில் கிடந்த அந்த புலியின் உடலில் இருந்து பற்கள் மற்றும் நகங்களை யாருக்கும் தெரியாமல் வீட்டிற்கு எடுத்துச் சென்றதாகவும், பணத்திற்காக விற்க முயற்சி செய்ததாகவும் தெரிவித்துள்ளனர். புலியின் உடல் கிடந்த இடத்திற்கு இருவரும் வனத்துறையினரை அழைத்துச் சென்று காண்பித்துள்ளனர். கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் புலியின் உடல் பாகங்களை ஆய்வு செய்து, ஆய்வகத்திற்கும் அனுப்பி உள்ளனர்.
இது குறித்து வனத்துறையினர், “புலி இறந்ததற்கான காரணம் தெரியவில்லை. புலியின் உடலில் இருந்து ஆய்வுக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. அழுகிய நிலையில் இருந்த மற்ற பாகங்களை அங்கேயே ஏரியூட்டினோம். இருவரிடமும் இருந்த கோரைப் பற்கள், நகங்களை பறிமுதல் செய்தோம்.
இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கூறாய்வு முடிவு அறிக்கை வந்த பிறகே புலியின் இறப்பிற்கான உண்மை காரணம் தெரியவரும்” என்றனர் .
பாதுகாக்கப்பட்ட வனத்திற்குள் அந்நிய நபர்களின் நடமாட்டம், வேட்டைத் தடுப்பு, வனவிலங்குகளின் இறப்பு போன்றவற்றை கண்காணிக்க தொடர் ரோந்து பணிகளில் ஈடுபடுவதாக வனத்துறையினர் தெரிவிக்கும் நிலையில், புலி ஒன்று இறந்து கிடந்ததை வனத்துறையினர் ஏன் கவனிக்கவில்லை என வன உயிர் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88