ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைய, நாட்டிலுள்ள வறிய குடும்பங்களை சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் தேசிய திட்டத்தின் கிளிநொச்சி மாவட்டத்திற்கான நிகழ்வு (14/07/2024) நேற்று நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள இரண்டு கல்வி வலயங்களிலும் இருந்து தெரிவுசெய்யப்பட 662 மாணவர்களுக்கு இதன்போது புலமைப்பரிசில் நிதிக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதியின் மேலதிக சிரேஷ்ட செயலாளர் சமன் பந்துசேன, வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர், கல்வித் திணைக்கள அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், “ இலவச கல்வியை வழங்கும் நாடுகளில் இலங்கை முன்னிலையில் உள்ளது.
கொவிட் பெருந்தொற்று, பொருளாதார நெருக்கடி, இயற்கை அனர்த்தம் என நாடு நெருக்கடியான சூழ்நிலையில் காணப்பட்ட போதும், இலவச கல்வி மற்றும் மருத்துவ சேவையை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.
அரசாங்கம் இவ்வாறான நிலையில் இலவச சேவைகளை முன்னெடுப்பதில் பின்வாங்கவில்லை. இளம் சமூகத்தினரின் கல்விக்கான முதலீடுகள் என்பது நாட்டின் முதுகெலும்பாகும்.
இதன் அடிப்படையில் நாட்டில் இலவச கல்விமுறை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்காக பாரிய அளவில் நிதி செலவிடப்படுகிறது. ஜனாதிபதி நிதியமானது பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இலவச மருத்துவ சேவைக்கு அப்பால், கடுமையான நோய்களுக்கு சிகிச்சை பெறுவதற்கான நிதியை, ஜனாதிபதி செயலகம் வழங்கி வருகிறது. மாணவர்களுக்கான இலவச கல்வி வழங்கப்படுகிறது. பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹாபொல புலமைப்பரிசில் வழங்கப்படுகிறது. இந்த செயற்பாடுகளை தவிர பாடசாலை மாணவர்களின் நாளாந்த கற்றல் செயற்பாடுகளுக்கு உதவும் வகையில் ஜனாதிபதியால் இந்த புலமைப்பரிசில் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் பல சிக்கல்களுக்கு மத்தியிலும், மாணவர்களின் எதிர்காலம் கருதி ஜனாதிபதி இவ்வாறான தீர்மானம் மேற்கொண்டுள்ளமை தொடர்பில் மாணவர்களும், பெற்றோர்களும் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
கல்வி மாத்திரமே சமூகத்தை மாற்றக்கூடிய ஆயுதமாக காணப்படுகின்றது. ஆகவே, சிறந்த கல்வியை பெற்றுக்கொள்வதைப் போலவே, திறன் மேம்பாடுகளையும் அபிவிருத்தி செய்துக்கொள்ள வேண்டும். நாட்டின் எதிர்காலத்தை மாற்றுபவர்களாக மாணவர்கள் உருவாக வேண்டும் என ஆளுநர் மேலும் தெரிவித்தார்.