சென்னையில் நேற்று இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இளையராஜாவின் 50 ஆண்டு திரையுலக வாழ்க்கையைக் கொண்டாடும் வகையில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெற்றது. உடன் விபாவரி, ஸ்வேதா மோகன், எஸ்.பி.பி.சரண், ஹரி சரண், மது பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பாடல்களைப் பாடினர். நிகழ்ச்சியின் ஹைலைட்டாக ஹங்கேரி இசைக் கலைஞர்களும் நிகழ்ச்சியில் இசையமைத்தனர். கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்குப் பிறகு நடைபெற்ற இந்த இசை நிகழ்ச்சியில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் இளையராஜாவின் பல எவர்கிரீன் பாடல்கள் பாடப்பட்டன. அப்போது ‘அன்னக்கிளி உன்னைத்தேடுதே’, ‘மச்சானைப் பார்த்தீங்களா’ பாடல்களின் ஆக்கம் குறித்து பொறுமையாக, அழகாகப் பகிர்ந்தார் இளையராஜா. அப்போது அவர் சொன்ன நெகிழ்ச்சியான வார்த்தைகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
பாடல்கள் குறித்துப் பகிர்ந்ததும் “க்ளாஸ் எடுக்கறேன்னு நினைக்காதீங்க. என்னுடைய பயோபிக் எடுக்கறாங்க. தனுஷ் கிட்ட இந்தப் பாடல்கள் உருவான கதை பத்தியெல்லாம் சொல்லிருக்கேன், ஆனா படத்துல வருமான்னு தெரியல. அதான் உங்ககிட்ட பகிர்ந்துக்கிட்டேன். உங்களுக்குக்காகத்தானே… நானே மனசுல வெச்சுட்டு என்ன பண்ணப் போறேன்? எனக்குள்ள இருக்கிற விஷயம் உங்களுக்குத் தெரிஞ்சாதானே அதுல சந்தோசம்?! நீங்க சந்தோஷப்படறதை பார்த்தாதானே எனக்கு சந்தோஷம்” என்று பேசியிருக்கிறார்.
மெர்குரி நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்படும் இந்த இசை நிகழ்ச்சி சென்னை மட்டுமல்லாமல், லண்டன், பாரிஸ், சூரிச் உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து நடைபெற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.