துப்பாக்கி சூடு தாக்குதலில் இருந்து தப்பியது குறித்து டொனால்டு டிரம்ப் கூறியது என்ன?

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும் களமிறங்கியுள்ளனர்.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இரு வேட்பாளர்களும் தீவிர பிரசாரம் மற்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், பென்சில்வேனியா மாகாணம் பட்லர் நகரில் நேற்று நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் பங்கேற்றார்.

பொதுக்கூட்டத்தில் டொனால்டு டிரம்ப் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென அவர் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் டிரம்பின் காதில் ரத்த காயம் ஏற்பட்டது. அதேவேளை, இந்த தாக்குதலில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற நபர் உயிரிழந்தார். மேலும் சிலர் படுகாயமடைந்தனர்.

துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்திய நபரை பாதுகாப்புப்படை அதிகாரிகள் சுட்டுக்கொன்றனர். பின்னர், காதில் காயம் ஏற்பட்ட டிரம்ப் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். காயத்திற்கான சிகிச்சை அளிக்கப்பட்டபின் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து, அவர் தொடர்ந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.

இந்நிலையில், குடியரசு கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக டிரம்பை முன்மொழியும் குடியரசு கட்சியின் தேசிய மாநாடு விஸ்கான்சின் மாகாணத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க டிரம்ப் விஸ்கான்சின் புறப்பட்டுள்ளார்.

அப்போது தனியார் செய்தி நிறுவனத்திற்கு டிரம்ப் பேட்டி அளித்தார். துப்பாக்கி சூடு தாக்குதலில் இருந்து தப்பியபின் டிரம்ப் அளிக்கும் முதல் பேட்டி இதுவாகும். இந்த பேட்டியில் டிரம்ப் கூறியதாவது,

கடவுளின் செயலாலோ அல்லது அதிர்ஷ்டத்தாலோ நான் காப்பாற்றப்பட்டேன். நான் தற்போது இங்கு இருந்திருக்கமாட்டேன். நான் உயிரிழந்திருப்பேன். மிகவும் நம்பமுடியாத சம்பவம் என்னவென்றால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டபோது சரியான தருணத்தில் எனது தலையை திருப்பியது மட்டுமின்றி சரியான தருணத்தில் எவ்வளவு தூரம் தலையை திருப்பவேண்டுமோ அவ்வளவு தூரம் திருப்பியுள்ளேன். எனது காதை உரசி சென்ற துப்பாக்கி தோட்டா என்னை சுலபமாக கொன்றிருக்கும். இந்த துப்பாக்கி சூடு தொடர்பான ஒட்டுமொத்த நிகழ்வும் நம்பமுடியாத அனுபவம் போன்று உள்ளது.

இதுபோன்ற சம்பவத்தை தான் பார்த்ததில்லை என்றும் இதுஒரு ஆச்சரியம் என்றும் எனக்கு சிகிச்சை அளித்த டாக்டர் கூறினார். அதிர்ஷ்டமோ அல்லது கடவுளின் செயலோ எனக்கு தெரியவில்லை. ஆனால், பெரும்பாலான மக்கள் இதை கடவுளின் செயல் என்று கூறுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.