Motivation Story:கடுப்பிலிருக்கும் மனைவியையும் குழந்தைகளையும் சமாளிப்பது எப்படி?-உதவிக்கு வந்த மேதை!

`நீங்கள் என்ன வேலை செய்கிறீர்களோ, அதற்கு நீங்கள் விசுவாசமாக இருக்க வேண்டும்.’ – அமெரிக்க எழுத்தாளர் ஸ்டீபன் கிங்.

ஆங்கிலத்தில், `வொர்க்கஹாலிக்’ (Workaholic) என்று ஒரு பதம் உண்டு. இந்த வகை மனிதர்களுக்கு சதா வேலை பார்த்துக்கொண்டேயிருப்பது பிடிக்கும். வேலை பார்க்கும்போது சாப்பாடு, தூக்கம், உறவு அத்தனையும் இவர்களுக்கு மறந்துபோகும்.  அதேபோல் ஆழ்ந்துபோய், அர்ப்பணிப்புடன் செய்யவேண்டிய தவிர்க்க முடியாத பணிகளிலும் சிலர் ஈடுபட்டிருப்பார்கள். ஆராய்ச்சிப் பணியில் ஈடுபடுபவர்கள், ஒரு வேலையை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடித்துவிடும் முனைப்பில் இருப்பவர்கள், விஞ்ஞானிகள்… என்று பலரை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

அலுவலகம், வேலை இரண்டையும் பேலன்ஸ் செய்ய முடியாமல் தடுமாறுபவர்கள் இவர்கள். தங்கள் வேலையில் ஜொலிக்கிறார்களோ, வெற்றிபெறுகிறார்களோ… திரும்பிப் பார்க்கும்போது சிலருக்குக் குடும்பம் விலகிப்போயிருக்கும்; உறவுகளுடன் ஓர் ஒட்டாத தன்மை வந்துவிட்டிருக்கும். சில நேரங்களில், `வேலை வேலை என்று மட்டும் இருக்காதீர்கள். மனைவி, குழந்தைகளையும் கொஞ்சம் பாருங்கள்,,,’ என்று யாரோ வழிகாட்டுவதும் நடக்கும். அதை உணர்ந்துகொண்டவர்கள் தப்பித்துவிடுவார்கள்.

இது, ஒரு மேதையின் வாழ்க்கையில் நடந்ததாகச் சொல்லப்படும் சம்பவம். திருவனந்தபுரத்தில் இருக்கும். தும்பா ஈகுவேட்டோரியல் ராக்கெட் லாஞ்சிங் ஸ்டேஷன். இந்திய ஆய்வு நிறுவனத்தால் (ISRO) நடத்தப்படும் தும்பா ஆய்வு நிலையம், ஒரு நொடிகூட ஓய்வில்லாமல் இயங்கிக்கொண்டிருப்பது. அட்டண்டர் முதல் ஆராய்ச்சியில் ஈடுபடும் விஞ்ஞானிகள் வரை அத்தனை பேரும் சதா பரபரவென இருப்பார்கள். குறிப்பாக, ராக்கெட் தொடர்பான ஆய்வுகள் நடக்கும் இடம், ராக்கெட் ஏவுதளம் என்பதால், விஞ்ஞானிகள் நேர வரையின்றி வேலை பார்த்துக்கொண்டிருப்பார்கள். ஒரு நாளைக்கு 12 மணி நேரம், 18 மணி நேரம்கூட வேலை பார்க்கவேண்டியிருக்கும்.

அந்த ஆய்வு நிலையத்தின் தலைவருடன் அடிக்கடி மீட்டிங்… அவர் சொல்வதையெல்லாம் இம்மி பிசகாமல் அப்படியே செய்ய வேண்டும். அப்படி வேலை பார்த்துக்கொண்டிருந்த சில விஞ்ஞானிகளுக்கு ஒருகட்டத்தில் `என்னடா வாழ்க்கை இது…’ என்று வெறுப்பு வந்தது. மன அழுத்தம், மன உளைச்சல்கூட ஏற்பட்டது. ஆனால், அவர்களால் தலைவரிடம் எதையும் கேட்க முடியவில்லை. ஒரு நாள் விடுமுறை கேட்கவே தயங்கினார்கள். வேலை தடைப்பட்டுவிடுமே என்று பயந்தார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, அவர்களுக்குத் தங்கள் தலைவரிடம் நல்ல மதிப்பு இருந்தது. அதைவிட, விசுவாசம் இருந்தது. ஏனென்றால், அவர்களின் தலைவர், அவ்வளவு நல்ல மனம் படைத்தவர்; அன்பானவர். விண்வெளி ஆய்வில், நம் நாடு சாதனை படைக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்.  

`தன்மீது நம்பிக்கையிருக்கும் ஒருவரால் மட்டுமே, பிறரிடம் உண்மையாக இருக்க முடியும்.’ – ஜெர்மானிய தத்துவவியலாளர், உளவியல் நிபுணர் ஈரிச் ஃபிரம் (Erich Fromm).

அது ஒரு மதிய நேரம். தலைவரின் அறை வாசலில் ஒரு விஞ்ஞானி வந்து நின்றார். அறைக் கதவைத் தட்டுவதற்கே அவருக்குத் தயக்கமாக இருந்தது. ஆனாலும், மனதை திடப்படுத்திக்கொண்டு தட்டினார்.. “நான் உள்ளே வரலாமா சார்..?’’

“வாங்க…’’ உள்ளிருந்து அழுத்தமான, அதேநேரத்தில் மென்மையான குரல் ஒலித்தது.

“ஒண்ணுமில்லை சார். ஒரு வாரமா என் குழந்தைங்க எக்ஸிபிஷனுக்குக் கூட்டிட்டுப் போகச் சொல்லி நச்சரிச்சுக்கிட்டு இருக்காங்க. அவங்களை இன்னிக்கி சாயந்தரம் கூட்டிட்டுப் போறதா பிராமிஸ் பண்ணியிருக்கேன்.’’

“ம்…’’

“அதனால இன்னிக்கி 5:30 மணிக்கி நான் கெளம்பிடுவேன். எனக்கு பர்மிஷன் வேண்டும்.’’

“நிச்சயமா… தாராளமா போயிட்டு வாங்க.’’ தலைவர் சிரித்த முகத்தோடு சொன்னார்.

இவ்வளவு எளிதாகத் தலைவரிடமிருந்து அனுமதி கிடைக்கும் என்று அந்த விஞ்ஞானி எதிர்பார்க்கவில்லை. மகிழ்ச்சியோடு தன் இடத்துக்குத் திரும்பினார். அப்படியே வேலையில் ஆழ்ந்துபோனார். நேரம் நகர்ந்துகொண்டிருந்தது. இப்போது அந்த விஞ்ஞானிக்கு வேலை… வேலை… வேறு ஒன்றிலும் கவனமில்லை. 4 மணிக்கு கேன்டீனிலிருந்து வந்த டீயைக்கூட ஆறிப்போன பிறகுதான் எடுத்துக் குடித்தார். மறுபடியும் வேலை… வேலை… வேலை. ஒருவழியாக அன்றைக்கு அவர் சரிபார்த்து முடிக்கவேண்டிய அத்தனையையும் செய்துவிட்டார். மனதில் ஒரு நிம்மதி. ஏதோ நினைவுக்கு வந்தவராக கைக்கடிகாரத்தைப் பார்த்தார். மணி இரவு 8:15.

`சின்சியாரிட்டி என்பது பார்ப்பதற்குத் தாழ்ந்ததாகத் தெரியலாம். ஆனால், அதனால் ஒருவர் அடிமையாகிவிட மாட்டார்,’ – ஆங்கிலக் கவிஞர் பைரன் (Lord Byron).

கைக்கடிகாரத்தைப் பார்த்தவர் பதறிப்போனார். `ஐயய்யோ… பிள்ளைகளை எக்ஸிபிஷனுக்குக் கூட்டிக்கிட்டுப் போறதா சொல்லியிருந்தோமே… அவங்க என்ன நினைப்பாங்க… இப்போ என்ன பண்ணுறது?’ என்று நொந்துபோனார். தன் அறைக்கதவை மூடினார். தலைவரிடம் சொல்லிவிட்டுப் போய்விடலாம் என்று நினைத்தவர், அவரின் அறைக்குப் போனார். அறை பூட்டியிருந்தது. அவர் எப்போது வருவார் என்பதும் தெரியவில்லை. `சரி, நாளைக்குச் சொல்லிக்கொள்ளலாம்’ என்று நினைத்தவராக வீட்டுக்குக் கிளம்பினார்.

காரை எவ்வளவு வேகமாக ஓட்ட முடியுமோ, அவ்வளவு வேகமாக ஓட்டினார். `சே… இன்னிக்கினு பார்த்து நேரம் போனதே தெரியலையே… பிள்ளைங்ககிட்ட நான் எப்பிடி முகம் குடுத்துப் பேசுவேன்… எப்பிடிச் சமாதானம் சொல்லப்போறேன்?’ என்றெல்லாம் நினைத்தபடி காரைச் செலுத்தினார். அவருக்குக் குற்ற உணர்வு மனதைத் துளைத்தெடுத்துக்கொண்டிருந்தது. வீட்டு வாசலுக்கு வந்ததும், காரை நிறுத்திவிட்டு அவசரமாக இறங்கி, வேகமாக வீட்டுக்குள் போனார்.

ஹாலில் அவருடைய மனைவி சோபாவில் அமர்ந்து எதையோ படித்துக்கொண்டிருந்தார். பிள்ளைகளைக் காணவில்லை. இவர் தன் தோள் பையை வைத்துவிட்டு, ஒவ்வோர் அறையாகச் சென்று பார்த்தார். பிள்ளைகள் இல்லை. அவருக்குத் தன் மனைவியிடம், `பிள்ளைகள் எங்கே?’ என்று கேட்கவும் பயமாக இருந்தது. தாமதமாக வந்ததற்கு மனைவியிடமிருந்து எரிமலையே வெடிக்கலாம். இப்போது என்ன செய்வது… மனைவிக்கு எதிரேயிருந்த மற்றொரு சோபாவில் அமர்ந்தார். சிறிது நேரம் அமைதியாக இருந்தார்.

“காபி எடுத்துட்டு வரட்டுமா… இல்லை டிபனே சாப்பிடுறீங்களா?’’

மனைவியின் குரலில் கடுமை இல்லை என்பதை கவனித்தார் விஞ்ஞானி. “பிள்ளைங்க எங்கே?’’ என்று மெதுவான குரலில் கேட்டார்.

“உங்களுக்குத் தெரியாதா… 5:15 மணிக்கு உங்க பாஸ் வந்தாரு. பிள்ளைங்களை எக்ஸிபிஷனுக்குக் கூட்டிக்கிட்டுப் போறீங்கன்னு சொன்னீங்களாமே… உங்களுக்கு வேலை இருக்குன்னு அவரே கூட்டிக்கிட்டுப் போயிட்டார்.’’

விஞ்ஞானிக்கு வியப்பு. என்ன நடந்திருக்கும் என்று அவரால் யூகிக்க முடிந்தது. தலைவர் தன் அறைப்பக்கம் 5:00 மணிபோல வந்திருப்பார். தான் பிஸியாக வேலை பார்த்திருப்பதைப் பார்த்திருப்பார். அவருக்கு, `இந்த விஞ்ஞானி பர்மிஷன் கேட்டாரே… பிள்ளைகளை எக்ஸிபிஷனுக்கு அழைத்துப்போக வேண்டும் என்று சொன்னாரே…  இன்னும் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறாரே… இவருடைய பிள்ளைகள் காத்திருப்பார்களே…’ என்று தோன்றியிருக்கும். அவரே அவர்களை அழைத்துக்கொண்டு போவதற்காக வந்திருப்பார்.

விஞ்ஞானியின் தலைவர் இப்படியெல்லாம் செய்பவரல்ல. ஆனால், இது அந்த விஞ்ஞானியின் அர்ப்பணிப்புடன்கூடிய வேலைக்கும், விசுவாசத்துக்கும், சின்சியாரிட்டிக்கும் அவர் கொடுத்த பரிசு. இப்படி ஒரு தலைவரின்கீழ், எத்தனை அழுத்தம் இருந்தாலும் யாருக்குத்தான் வேலை பார்க்கப் பிடிக்காது… அந்தத் தலைவர் யார்… உங்களால் கணிக்க முடிகிறதா?  

அவர், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர், அளப்பரிய சாதனைகளைச் செய்த விஞ்ஞானி ஏ.பி.ஜே.அப்துல் கலாம். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.