Snake Day: ஆபத்தானவையா ராஜநாகம்… இதைக் கண்டால் என்ன செய்ய வேண்டும்?

எங்கள் அலுவலகம் திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு பகுதியில், களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. என்னுடன் பணியாற்றும் முனைவர் தணிகைவேல் இரவு நேரங்களில் பாம்புகளை அவதானிப்பதில் வல்லவர். அவருடன் நடந்து சென்றால் குறைந்தது 10 வகையான பாம்புகளை காண்பித்து விடுவார்.

தரைகளில் காணப்படும் சுருட்டை விரியன், மண்ணுளிப் பாம்பு தொடங்கி, நீரில் காணப்படும் தண்ணீர் பாம்பு, சுவர்களில் ஏறும் வெள்ளிக்கோல் வரையன், மழைக்காலங்களில் மிகவும்
சாதரணமாக காணப்படும் கட்டுவரியன், மரங்களிலும் புதர்களிலும் காணப்படும் பச்சைப் பாம்பு, கொம்பேறி மூர்க்கன் என அனைத்துப் பாம்புகளும் அவரின் கண்களிலிருந்து தப்ப முடியாது. அடிக்கொரு முறை ஊர்களில் வீடுகளுக்குள் வந்து விடும் பாம்புகளை வனத்துறையின் உதவியுடன் மீட்கும் வேலைகளையும் நண்பர் தணிகைவேல் செய்து வருகிறார்.

தலையை உயர்த்திக் காண்பிக்கும் ராஜ நாகம்

அதனால் பல சமயங்களில் கிராம மக்கள் ஏதேனும் பாம்புகளை தங்கள் வீடுகளிலோ அல்லது சுற்றுப்புறங்களிலோ பார்த்தால் தணிகைவேலுக்கு தகவல் சொல்வார்கள். அவர்
மகிழ்ச்சியுடன் சென்று பாம்புகளை மீட்டெடுத்து மக்களின் அச்சத்தை தீர்த்துவிட்டு வருவார். 2023-ம் ஆண்டு நவம்பர் 27-ம் தேதி எங்கள் மையத்தின் அருகிலுள்ள சாமுவேல் ஐயா
அவர்களின் பேரன் வர்க்கீஸ், நண்பகல் 12.30 மணியளவில் மூச்சிழைக்க ஓடி வந்தான். அப்போது சுற்றியுள்ள வயல்களில் நெல் நடவு பணிக்காக உழவு வேலை மும்முரமாக நடந்து
கொண்டிருந்தது. ‘அண்ணே, எங்கள் வயலில் தொடை தண்டிக்கு அரை பனை நீளத்தில் பாம்பு ஒன்று வந்துள்ளது. பார்ப்பதற்கு ராஜநாகம் போல் உள்ளது. வந்து பாருங்கள்’ என்றான்.

அந்த பையன் அலுவலகத்தின் வெளியில் இருந்துதான் தணிகைவேலிடம் சொல்லிக் கொண்டிருந்தான். ஆனால், பல அறைகளில் சுறுசுறுப்பாகவும் சோம்பலாகவும் பணியாற்றிக்
கொண்டிருந்த அனைவரின் காதுகளுக்கும் அது எட்டிவிட்டது. அடுத்த நொடியிலேயே முழு அலுவலகமும், கிட்டத்தட்ட 10 நபர்கள் நான் உட்பட, அந்த வயலுக்கு விரைந்து விட்டோம்.
அந்த பையனுக்கு பெரிய நம்பிக்கை நமக்காக முழு அலுவலகமும் வந்துள்ளது. ராஜ நாகத்தை மீட்டெடுத்து சென்று விடுவார்கள் என்று. ஆனால் நாங்கள் சென்றது ராஜ நாகத்தை வேடிக்கை
பார்க்கதான் என்பது எங்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.
வயல் வரப்பில் இருந்த நொச்சி மரத்தின் அடியில் தனது நீளமான உடல் முழுவதையும் சுருட்டிக் கொண்டு, தலையை சற்று உயர்த்தி கம்பீரமாக காட்சிக் கொடுத்துக் கொண்டிருந்தது
அந்த ராஜநாகம்.

அந்த வரப்பில் இரண்டு முறை நாய் ஒன்று ஓடிச் சென்றது. அந்த நாய் ராஜநாகத்தை கவனிக்கவில்லை. அந்த ராஜநாகமும் அந்த நாயை ஒன்றும் செய்யவில்லை. சுற்றி டிராக்டர்கள் வயல்களை உழுதுக் கொண்டிருக்கின்றன. நாங்கள் பத்து பேர் அந்த
ராஜநாகத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அதை எதையும் பொருட்படுத்தாமல் அந்த ராஜநாகம் அமைதியாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. அப்போதுதான் புரிந்தது, ராஜநாகம் என்பது அமைதியான நற்குணம் கொண்ட ஒரு பாம்பு என்று. அது யாரையும் மிரட்டுவதற்கோ அல்லது துரத்துவதற்கோ முற்படவில்லை. அதேநேரம் அந்த இடத்தை விட்டு நகரவும் முற்படவில்லை.

மேற்கு மலைத் தொடர் அடிவாரத்தில் மீட்கப்பட்ட ராஜநாகம்

நான் ஏற்கனவே ஒரு முறை ராஜநாகத்தை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள நரைக்காட்டின் ஆற்றுக்கு அருகே பார்த்துள்ளேன். என்னுடன் வந்த நண்பர் ஆண்டனியிடம் அதைக் காண்பித்து மகிழ்ச்சியடைந்தேன். அந்த பாம்பு இரைத் தேடிக் கொண்டிருப்பதாக நண்பர் ஆண்டனிக்
கூறினார். அந்த ராஜ நாகமும் எங்களை பொருட்படுத்தவில்லை, அதனுடைய வேலையை அது செய்து கொண்டிருந்தது. இந்த இரண்டு நிகழ்வுகளும் உலக பாம்புகள் தினமாக இன்று (ஜூலை 16) ராஜநாகத்தை குறித்த இந்தக் கட்டுரையை எழுத தூண்டியது.

பாம்புகளின் வகைகள்

ராஜநாகம் இந்தியாவில் கிட்டத்தட்ட 350 சிற்றினங்களைச் சார்ந்த பாம்புகள் உள்ளன. அவற்றில் அதிகப்படியாக தமிழ்நாட்டில் சுமார் 184 சிற்றினங்களைச் சார்ந்த பாம்புகள் உள்ளன. இன்னும் நிறைய பாம்புகள் கண்டறியப்பட வாய்ப்புள்ளன. சமீபத்தில் கூட மேகமலை பகுதியில் புது வகையான கேடயவால் பாம்பு கண்டறியப்பட்டுள்ளது. பாம்புகள் இனப்பெருக்கம் மூன்று வழிகளில் நடைபெறுகிறது. சில வகையான பாம்புகள் முட்டையிட்டு குட்டிகளை கொண்டு வரும். சில பாம்புகளுக்கு வயிற்றுக்குள்ளேயே முட்டைகள் குட்டிகளாக மாறி வெளியே வரும். சில பாம்பினங்கள் நேரடியாகவே குட்டிகளை ஈனும்.

ஆனால் ராஜநாகம்; சற்று மாறுபட்டு கூடமைத்து அவற்றில் முட்டையிடும் பண்பினைக் கொண்டுள்ளது. வேறு எந்த இந்தியப் பாம்புகளுக்கும் இந்த பண்பு கிடையாது. இந்தியாவின்
பாம்பு மனிதன் என்றழைக்கப்படும் ரோமுலஸ் விட்டேகர் இதைப் பற்றி கூறும்போது, மேற்கு மலைத் தொடர்களில் கோடைக்காலமான ஏப்ரல் – மே மாதங்களில் சரியான இடத்தை தேர்வு செய்து, தேர்வு செய்யப்படும் இடமானது பெரும்பாலும் நெடிதுயர்ந்த மரங்களுக்கு அடியில் அல்லது மூங்கில் புதர்களுக்கு இடையே பெண் ராஜ நாகங்கள் கூடமைக்கின்றன. தனது உடலைப் பயன்படுத்தி சுற்றியுள்ள இலைத் தழைகளை ஒன்று சேர்த்து ஒரு இறுக்கமான சுருள் குவியலாக மூன்று அடி உயரத்திற்கு கூட்டினை அமைக்கிறது. இதற்கு சில நாட்கள் எடுத்துக் கொள்கிறது மற்றும் பெரிய ஆற்றலை செலவிடுகிறது என்று கூறுகிறார். அதற்குப் பின்னர் அந்தக் கூட்டில் 15 முதல் 50 தோல் முட்டைகளை இட்டு 75 முதல் 100 நாட்கள் வரை அதற்கு
முழு பாதுகாப்பையும் அளிக்கும் என்று கூறுகிறார்.

ராஜநாகம் குறித்து திருநெல்வேலி மாவட்டம், காரையாறு பகுதியில் வசிக்கும் காணி பழங்குடி இனத்தைச் சார்ந்த அண்ணன் பூதத்தான் அவர்களிடம் கேட்டபோது காணி இன மக்கள் ராஜநாகத்தை ‘கருஞ்சாத்தி’ என்றழைக்கின்றனர். ‘இவைகளின் கூட்டை நான் பல முறை பார்த்துள்ளேன். பாம்பின் கூடு பறவைகளின் கூடு போன்று அல்ல. இது மிக இறுக்கமாக
இருக்கும். காட்டுத் தீ ஏற்பட்டால்கூட அதை தாங்கும் வலிமையில் அந்த கூடு வேயப்பட்டிருக்குமாம். கூட்டில் கருஞ்சாத்தி இருக்கும் போது தலையை சற்று உயர்த்திக் கொண்டு இருக்கும். ஆனால், நாம் அதைப் பார்க்க அருகில் சென்றால் கண் இமைக்கும்
நேரத்தில் நம்மை நோக்கி சீறி பாய்ந்து விரட்டும். கூடு வைத்திருக்கும் காலங்களில்தான் பாதுகாப்புக் கருதி கருஞ்சாத்தி ஆட்களை விரட்ட முற்படுகிறது. மற்ற காலங்களில் மிக சாதுவாக இருக்கும்’ என்று தனது அனுபவத்தை பகிர்ந்துக் கொண்டார்.

தலையை உயர்த்திக் காண்பிக்கும் ராஜ நாகம்

இதுகுறித்து முனைவர் தணிகைவேல் கூறும்போது,

“ராஜ நாகங்கள் கூடமைத்து முட்டைகள் இடுவதினால் முட்டைகளுக்கு முழு பாதுகாப்பு கிடைக்கிறது. மேலும், அந்தக் கூட்டில் உள்ள இலை, தழைகள் மட்கும் போது அதிலிருந்து வெளிவரும் வெப்பம் கூட்டிற்குள் தட்ப வெப்ப நிலையை சீராக வைக்கவும் முட்டைகள் முழு வளர்ச்சியடைந்து பொரிக்கவும் உதவுகிறது என்கிறார். கூடமைத்து, முட்டையிட்டு அதிலிருந்து குட்டிகள் வெளிவரும் வரை பெண் பாம்பு அங்கிருந்து தேவையான முழு பாதுகாப்பையும், பராமரிப்பையும் வழங்குகிறது. பொதுவாக பெற்றோர் பாதுகாப்பு முறை வேறு எந்த ஊர்வன வகை விலங்கிடமும் இல்லாத நிலையில், இது போன்ற கூடமைத்து பராமரிக்கும் முறை ராஜா நாகத்திடம் மட்டுமே காணப்படுகிறது” என்கிறார்.

ராஜநாகம் ஆபத்தான பாம்பா?

உருவத்தில் பெரிய அளவில் இருப்பதால் ராஜநாகத்தை ஆபத்தான பாம்பு என்று தவறாக நினைத்துக் கொள்கிறோம். பாம்புகளைக் குறித்து நமக்கு சொல்லப்படும் கதைகள், பாம்புகளைக் குறித்து நாம் அறிந்துள்ள தகவல்களைக் கொண்டு ஒரு பத்தடி பாம்பை பார்த்தால் நமக்கு பயம் ஏற்படுவது என்பது வியப்பல்ல. ஆனால், இதுவரைக்கும் ராஜநாகம் மக்களைக் கடித்ததாக தகவல்கள் இல்லை. உருவத்தில் பெரிதாக இருப்பதால் அவை நம் கண்களில்
எளிதாக தென்பட்டுவிடும். அதனால் அவற்றிலிருந்து நம்மால் விலகி இருக்க முடியும்.

கர்நாடகா மாநிலம் ஆகும்பே பகுதியில் அவ்வப்போது வீடுகளுக்கு ராஜநாகம் வருவது வழக்கம். அங்குள்ள மக்கள் ஆகும்பே பகுதியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பாம்புகள் மீட்பு மையத்திற்கு தகவல் கொடுத்து அதை மீட்டெடுத்து வனத்தில் விடும் பணியினை செய்துக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலும் ராஜநாகங்கள் மழைக்காடுகளில் வாழ்கின்ற பாம்பாக அறியப்படுகிறது. ஆனால் சமீப காலங்களில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரக் கிராமங்களில் இவைகளின் வருகை அதிகரித்துள்ளது. அவ்வப்போது ராஜநாகங்கள் மீட்பு
குறித்த செய்தி அதிகமாக வந்துக் கொண்டிருப்பது இதை உறுதிப்படுத்துகிறது.

ஆகும்பே பகுதியில் இரவு நேரத்தில் காணப்பட்ட ராஜ நாகம்.

காடுகள் அழிக்கப்படுவதும், காட்டையொட்டிய பகுதிகளில் உள்ள புதர்களை அழித்து விவசாயம் மேற்கொள்வதும் இவைகள் இங்கு வருவதற்கு காரணமாகின்றன. பொதுவாக ராஜநாகங்கள் மற்ற பாம்புகளையும், உடும்பு போன்ற பெரிய பல்லி இனங்களையும்
உணவாகக் கொள்கின்றன. குறிப்பாக சாரைப்பாம்பு ராஜநாகத்திற்கு மிக பிடித்த உணவு. எலிகளைத் தேடி சாரைப்பாம்புகள் நெல் வயல்களுக்கு வருவது வழக்கம். அதனால் சாரைப்பாம்புகளைத் தேடி ராஜநாகமும் நெல்வயல்களுக்கு வரலாம் என்று கூறப்படுகிறது. இது மலை அடிவாரப் பகுதிகளில் நடப்பது இயல்புதான் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
எனவே ராஜநாகத்தை பார்த்து அதிர்ச்சியடையாமல் வனத்துறைக்கு தகவல் கொடுத்தால் அவர்கள் வந்து மீட்டுச் சென்று விடுவார்கள் என்று சொல்கிறார் வனத்துறையில் பணியாற்றி வரும் நண்பர் ரமேஷ்.

மதிவாணன்

இந்திய வன உயிரினச் சட்டம் 1972ன் படி அட்டவணை 2ல் ராஜநாகம் பட்டியிலடப்பட்டுள்ளது. அதுபோல் பன்னாட்டு இயற்கைச் சங்கத்தின் செம்பட்டியலில் அழிவாய்ப்பு இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இவைகளை பாதுகாக்க
தேவையான முன்னெடுப்புகளை எடுக்க வேண்டியது அவசியம். பொதுவாக மனித-வன உயிரின எதிர் கொள்ளலுக்கு மிக முக்கிய காரணம் காடழிப்பு என்பதை அனைவரும் புரிந்து கொண்டு இனி வரும் காலங்களில் காடழிப்பினை தவிர்க்க ஆவண செய்ய வேண்டும். இப்பூவுலகு மனிதனுக்கு மட்டுமல்ல, பாம்புகளைப் போன்ற பல்லுயிர்களுக்கும்தான் என்ற எண்ணம் மேலோங்க வேண்டும்.

மு. மதிவாணன்,
ஒருங்கிணைப்பாளர் மற்றும் மூத்த ஆய்வாளர்,
அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையம், மணிமுத்தாறு, திருநெல்வேலி.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.