நிலவிலும் நிலத்தடி குகை இருக்கு! நிலவில் மனிதர்களை குடியேற்றும் நம்பிக்கைக்கான ஆதாரம்!

தொழில்நுட்ப முன்னேற்றத்தினால் இன்றைய காலகட்டத்தில் நமது வாழ்க்கை மிகவும் முன்னேறியிருக்கிறது. பூமியில் இப்படியெல்லாம் நடக்குமா என்று நாமே வியக்கும் வகையில் பல்வேறு கண்டுபிடிப்புகள் ஆச்சரியத்தில் உறைய வைக்கின்றன. பூமியில் மட்டுமல்ல, அண்டத்தில், பிரபஞ்சத்தில் உள்ள உண்மைகளை கண்டறிய விஞ்ஞானிகள் தொடர்ந்து பாடுபட்டு வருகின்றனர். பூமியில் மட்டுமல்ல, பிரபஞ்சத்தில் உள்ள பிற கிரகங்கள், நட்சத்திரங்கள் என வானியல் ஆய்வும் ஆராய்ச்சியும் விரிவடைந்துக் கொண்டே செல்லும்போது, புதிய கண்டுபிடிப்புகள் பல்வேறு சாத்தியக்கூறுகளை முன்வைக்கிறது.

அந்த வகையில் நிலவில் ஆராய்ச்சி மேற்கொண்டிருக்கும் விஞ்ஞானிகள், நிலவில் நிலத்தடி குகைகள் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். இது சந்திரனில் மனிதர்கள் தங்குவதற்கான இடமாக இருக்குமா என்ற கோணத்தில் ஆராய்சிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
 
விஞ்ஞானிகள் சந்திரனில் நிலத்தடி குகையை கண்டுபிடித்துள்ளது, எதிர்கால சந்திர தளத்திற்கான முக்கிய இடமாக இருக்கலாம். இதன் முதற்கட்டமாக நிலவில் ஒரு குகை இருப்பதை உறுதிப்படுத்தியுள்ள விஞ்ஞானிகள், நிலவில் மேலும் நூற்றுக்கணக்கான நிலத்தடி குகைகள் இருக்கலாம் என்று கருதுகின்றனர். இந்த குகைகள், பூமியில் இருந்து செல்லும் விண்வெளி வீரர்கள் எதிர்காலத்தில் தங்க வைக்க பாதுகாப்பான இடமாக இருக்கலாம் என்ற நம்பிக்கையைக் கொடுக்கிறது. 

தற்போது கண்டறியப்பட்டுள்ள சந்திரனின் நிலத்தடி குகையானது, 1969 இல் நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்ட்ரின் தரையிறங்கிய பகுதிக்கு மிக அருகில் உள்ளது. 

இந்த குகையை Mare Tranquillitatis பகுதியில் இருக்கும் பள்ளத்தில் இருந்து அணுகலாம் என்று கண்டறிந்துள்ளனர். இந்த குகையானது, சந்திரனின் மேற்பரப்பிலிருந்து அணுகக்கூடியதாக இருப்பதால், சந்திர தளத்தை உருவாக்குவதற்கான முக்கிய இடமாக அமையலாம் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. நிலவின் சுற்றுச்சூழல் மனிதர்கள் வாழ்வதற்கு மிகவும் கடினமானதாக இருக்கும் என்பதால், இந்தக் குகை, பூமியில் இருந்து செல்லும் விண்வெளி வீரர்கள் தங்குவதற்கான இயற்கையான தங்குமிடமாக செயல்படும் சாத்தியக்கூறுகள் அதிகம்.

இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள குழுவினரை வழிநடத்துகிறார் விஞ்ஞானி லியோனார்டோ கேரர். அவரது கூற்றுப்படி, இந்த குகைகளில் சிக்கலான கட்டுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளாமலேயே மனிதர்கள் தங்குவதற்கான கட்டமைப்பு பகுதிகளாக இருக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. 

இந்த புதிய ஆராய்ச்சி அண்மையில் நேச்சர் வானியல் சஞ்சிகையில் (Nature Astronomy) வெளியானது.  சந்திர ஆய்வுகள் பற்றிய இந்த மைல்கல் கண்டுபிடிப்பை, ’Radar evidence of an accessible cave conduit on the Moon below the Mare Tranquillitatis pit’ என்ற பெயரில் இந்த ஆய்வுக் கட்டுரை நேச்சர் அறிவியல் சஞ்சிகையில் வெளியானது.  

நேற்று, (ஜூலை 15, 2024 திங்கள்கிழமை) வெளியான இந்த ஆய்வு, நிலவில் சந்திரனின் உட்புறத்தில் குகைகள்  இருப்பதற்கான ஆதாரத்தை முதன்முறையாக கொடுத்துள்ளது. இந்த குகை அமைப்பானது வெற்று எரிமலைக்குழாயாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

இந்த ஆய்வை மேற்கொள்ள இத்தாலிய விண்வெளி நிறுவனமும் நிதியுதவி அளித்துள்ளது. பதுவா பல்கலைக்கழகம் மற்றும் லா வென்டா புவியியல் ஆய்வுகள் ஏபிஎஸ் ஆகிய அமைப்புகளின் ஆராய்ச்சியாளர்களும் இந்த ஆய்வுப் பணியில் அங்கும் வகிக்கின்றனர். புவியியல் பகுப்பாய்வு மற்றும் அடையாளம் காணப்பட்ட வழித்தடத்தின் மாதிரியாக்கம் தொடர்பான பணிகளை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.

நிலவின் ஆழமான பள்ளம் மேர் டிரான்குவிலிடாடிஸ், இது 80 மீட்டர் நீளமும் 45 மீட்டர் அகலமும் கொண்டது.  இந்த பள்ளமானது சந்திரனின் குகைக்கு செல்கிறது என்பதை நாசாவின் சந்திர உளவு ஆர்பிட்டர் (lunar reconnaissance orbiter (LRO)) ரேடார் தரவு பகுப்பாய்வு காட்டுகிறது. குகையானது மேற்பரப்பிலிருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் உள்ளது.

இந்த குகைகள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக கோட்பாட்டளவில் உள்ளன, ஆனால் அவற்றின் இருப்பை நிரூபிப்பது இதுவே முதல் முறை என்று ட்ரெண்டோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் லோரென்சோ ப்ரூஸ்ஸோன் தெரிவித்தார்.

2010 ஆம் ஆண்டில், LRO NASA பணியின் ஒரு பகுதியாக, மினியேச்சர் ரேடியோ-அதிர்வெண் (Mini-RF) கருவியானது Mare Tranquilitatis பள்ளத்தை படம் பிடித்தது. அதற்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு, அண்மையில் உருவாக்கப்பட்ட சிக்கலான சிக்னல் செயலாக்க நுட்பங்களைக் கொண்டு இந்தத் தரவை ஆய்வாளர்கள் மறுபரிசீலனை செய்தபோது பள்ளத்தில் இருந்து ரேடார் பிரதிபலிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. அதில், சந்திரனின் நிலத்தடி குகைக்கான வழித்தடம் நன்றாக தெரிகிறதாக சிறப்பாக விளக்கப்பட்டுள்ளன” என்று லோரென்சோ ப்ரூஸ்ஸோன் கூறுகிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.