Romania: கரடிகளை அழிக்க சட்டம் நிறைவேற்றிய ருமேனியா நாடாளுமன்றம்… காரணம் என்ன?

ருமேனியா (Romania) நாடாளுமன்றம் கரடிகளை அழிக்க (Culling) அவசரக் கூட்டம் கூட்டி அவசரச் சட்டம் நிறைவேற்றியிருப்பது தற்போது பேசுபொருளாகியிருக்கிறது.

சமீபத்தில் கார்பாத்தியன் மலைப் பாதையில் (Carpathian Mountains Trail) தனது காதலனுடன் நடைபயணம் மேற்கொண்ட 19 வயது பெண் சுற்றுலாப் பயணி கரடியால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

ருமேனியா – Romania

இது தொடர்பான செய்திகள் வேகமாகப் பரவவே, ருமேனியா பிரதமர் மார்செல் சியோலாகு (Marcel Ciolacu), கோடை விடுமுறையில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்து, அவசரக் கூட்டத்தை ஏற்பாடு செய்தார். இறுதியாக, ருமேனிய ப்ரவுன் கரடி (Romanian Brown Bear) அல்லது உருசஸ் ஆர்க்டோஸ் (Urusus Arctos) என்றழைக்கப்படும் கரடிகளின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் 481 கரடிகளை அழிக்க அங்கீகாரமளிக்கும் சட்டத்தை நிறைவேற்றியது.

இந்த வகையான அழித்தல் (Culling) என்பது, `மனித மக்கள்தொகைக்கு அச்சுறுத்தலாக அல்லது தங்களின் இனப்பெருக்கத்தால் மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையிலான சமநிலையைச் சீர்குலைக்கும் விலங்குகளைத் தேர்ந்தெடுத்து அல்லது இலக்கு வைத்துக் கொல்வதாகும்’. மறுபக்கம், கடந்த 20 ஆண்டுகளில் 26 பேர் கரடிகள் தாக்குதலில் கொல்லப்பட்டிருப்பதாகவும், 274 பேர் காயமடைந்திருப்பதாகவும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ருமேனியா அரசு தெரிவித்திருந்தது. இதனால், கடந்த ஆண்டு 220 கரடிகளை அழிக்க அனுமதிக்கப்பட்டதை விடவும் இரண்டு மடங்கு அதிகமாக 481 கரடிகளை அழிக்க அரசு முடிவெடுத்திருக்கிறது.

ருமேனிய ப்ரவுன் கரடி (Romanian Brown Bear)

அதேசமயம், கார்பாத்தியன் மலைகளைத் தங்கள் வீடாகக் கொண்ட கரடிகளால் இவ்வாறு மனிதர்கள் பாதிப்புக்குள்ளாக்குவதற்கும் மனிதர்களின் செயல்களே காரணமாகவும் அமைந்திருக்கிறது. மலைகளில் சட்ட விரோதமாக மரங்கள் வெட்டப்படுவது, காடழிப்பு, மனித குடியேற்றத்தின் வளர்ச்சி, மலைகளில் விவசாய உள்கட்டமைப்பு மற்றும் விவசாயத் தலையீடுகள் என மனிதர்களின் செயல்களால் இந்த ருமேனிய ப்ரவுன் கரடிகள் தங்களின் வாழ்விடங்களை இழந்து தவிக்கும் சூழலுக்கு ஆளாகியிருக்கிறது.

இதனால், சமீப காலங்களில் நகரங்களில் கரடிகள் நடமாட்டம் சகஜமாகிவருவதால், மக்கள் மற்றும் கரடிகள் என இரண்டையும் எப்படி பாதுகாப்பது என அரசு திணறிவருகிறது. இருப்பினும், உலகம் முழுவதுமுள்ள சுற்றுசூழல் ஆர்வலர்கள் ருமேனிய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புக்குரல் கொடுத்துவருகின்றனர். குறிப்பாக, கரடிகளை அழிப்பதால் இத்தகைய நிலைமை மாறாது என்றும், அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாப்பது, மலைகளில் மனித நடவடிக்கைகள் குறைக்கப்படுவதே இதற்குத் தீர்வாக அமையும் என்றும் சுற்றுசூழல் ஆர்வலர்கள் நம்புகின்றனர்.

ருமேனிய ப்ரவுன் கரடி (Romanian Brown Bear)

ஐரோப்பாவில் இருக்கும் மொத்த ப்ரவுன் கரடிகளில் 60 சதவிகிதத்துக்கும் அதிகமானவை ருமேனியாவில் இருக்கின்றன. கார்பாத்தியன் மலைகளில் மட்டும் சுமார் 6,000-க்கும் மேற்பட்ட ப்ரவுன் கரடிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இவற்றால் மனிதர்களைப் போலவே இரண்டு கால்களில் நடக்க முடியும். அதோடு, மனிதர்களைப் போலவே இவற்றால் கைகளால் பொருள்களையும் எடுக்க முடியும்.

ருமேனிய ப்ரவுன் கரடி (Romanian Brown Bear)

ஐரோப்பாவிலுள்ள மிகப்பெரிய மாமிச உண்ணிகளில் இந்தப் ப்ரவுன் கரடிகளும் ஒன்று. மணிக்கு 30 மைல் கி.மீ அளவுக்கு வேகமாக ஓடக்கூடியவை இவை. இந்த ருமேனிய கரடிகள் மரங்களில் கீறல்கள் ஏற்படுத்துவதன் மூலமும், வாசனை மற்றும் ஒலி மூலமும் தங்களுக்குள் தொடர்புகொள்கின்றன. பொதுவாக மனிதர்களிடமிருந்து எச்சரிக்கையாக இந்தக் கரடிகள், தங்களுக்கு அச்சறுத்தல் ஏற்படும்போது மட்டுமே தாக்குகின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.